பழனி அருகே செங்கல் லாரியும் – தேங்காய் லாரியும் மோதிய விபத்தில் இருவர்
உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனிஅருகே பாப்பம்பட்டி அருகே உள்ளது சின்னாக்
கவுண்டன்புதூர் பகுதியில் தேங்காய் வெட்டி எடுப்பதற்காக சென்ற லாரி ஒன்று கிழக்கு
நோக்கி சென்றது. தேங்காய் லாரியை பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த கணபதி
என்பவர் ஓட்டி வந்தார். தேங்காய் லாரிமீது எதிரே வந்த செங்கல் லாரி ஒன்று
மோதியது. இதில் தேங்காய் லாரியின் மீது செங்கல் லாரி ஏறி நின்றது. இந்த
விபத்தில் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, காளிமுத்து ஆகிய இருவரும்
உயிரிழந்தனர். மேலும் கணபதி, சுமதி, செல்லம்மாள், மாயவன், முத்துசாமி,
பேச்சியம்மாள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் லாரியின் அடியில் சரக்கு வேன் சிக்கிக் கொண்டதில் நீண்ட நேரம் பொதுமக்களும் தீயணைப்பு படை வீரர்களும் போராடி விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் லாரிகளை பிரித்தனர்.
பழனி- கொழுமம் சாலையில் நடந்த விபத்தின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







