ஈரான் போரால் இரண்டு இந்தியர்கள் பலி; மேலும் ஒருவர் மாயம் : வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்….!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போரால் இதுவரை இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய இக்கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இக்கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு கடந்த 13ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்ட அமர்வு இரு அவைகளிலும் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களவையில் உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் மற்றும் இஸ்ரேல்,அமெரிக்கா போர் குறித்து  விளக்கம் அளித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது : ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா போரானது அந்த பிராந்தியத்தை சுற்றியுள்ள பல நாடுகளையும் பாதித்துள்ளது. ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் உச்சபட்ச தலைவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் கவலை அளிக்கக்கூடிய விஷயம்.

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்ட உடனேயே பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுக் கொண்டு வருவது போன்ற பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தோம்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தை கவனமாக உற்று நோக்கி வருகிறார். சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உரிய உத்தரவுகளையும் அவர் பிறப்பித்திருக்கிறார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சீராக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ஈரான் உள்ளிட்ட நாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களுக்கு அங்குள்ள தூதரகங்கள் மூலமாக தொடர்ச்சியாக உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை, கிட்டத்தட்ட 67,000 இந்தியர்கள் சர்வதேச எல்லைகளைத் கடந்து நாடு திரும்பியுள்ளனர்.

இந்தப் போரில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போய் உள்ளார்.

வளைகுடா நாடுகளில் 1 கோடி இந்தியர்கள் உள்ளனர். ஈரானில் மாணவர்கள் உள்பட 4000 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. எங்களை பொறுத்தவரை பொதுமக்களின் நன்மை தான் முதன்மையான விஷயம். அதற்காக பல்வேறு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.