முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு கட்டுரைகள் தமிழகம் சினிமா சட்டம் Health

நயன்தாராவின் இரட்டை குழந்தை: வாடகைத் தாய் குழந்தை பற்றி சட்டம் சொல்வது என்ன?


ஜெயகார்த்தி

திருமணமான 4 மாதங்களில் இரட்டைக் குழந்தை. விக்னேஷ் சிவன் ட்வீட் தான் தற்போதைய பேசுபொருள். 4 மாதங்களில் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தாலும், எப்படி குழந்தை பிறந்தது? வாடகைத் தாய் மூலமா? இயற்கையாகவா என்பது தொடர்பாக விக்னேஷ் சிவனோ? நயன்தாராவோ வெளிப்படையாக இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. என்றாலும் இது ரசிகர்களிடையே பல்வேறு விதமான கருத்து மோதலை உருவாக்கி உள்ள சூழலில் வாடகைத் தாய் மூலம் யாரெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்? இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்…

காதல் ஜோடிக்கு கலக்கல் திருமணம்

தமிழ்த் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. அவருக்கும், நானும் ரவுடி தான் என்று கூறி நயன்தாரா மனதில் இடம்பிடித்த திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருந்த நீண்டகால காதல் கடந்த ஜூன் மாதம் திருமணத்தில் கைகூடியது. தமிழ்த் திரையுலகம் மட்டும் இன்றி இந்தியத் திரையுலகமே திரண்டு நட்சத்திர தம்பதியை வாழ்த்தி மகிழ்ந்தது.
வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்த தம்பதி, மகிழ்ச்சியாக தேனிலவைக் கழித்து, புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் பிறந்தநாளை, வெளிநாட்டில் இந்த நட்சத்திர தம்பதி கொண்டாடியது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர்களே வெளியிட்டு மகிழ்ந்தனர். அப்போது கூட அவர் கருவுற்றிருப்பது போன்ற படமோ, தகவலோ வெளியாகவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரட்டை குழந்தையும், அம்மா அப்பாவும்

இந்த சூழலில் சரியாக திருமணமான 4 மாத காலத்தில், நேற்று (அக்,9) நயனும், நானும் அம்மா அப்பா ஆகியுள்ளோம் என்றும், இரட்டை ஆண் குழந்தைகளின் பெற்றோராக ஆகியுள்ளோம் என்றும் கூறி ரசிகர்களை அதிர்ச்சி கலந்த ஆர்ச்சர்ய மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் விக்னேஷ் சிவன். அத்துடன் அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

நட்சத்திர தம்பதிக்கு தமிழ்த் திரையுலகினர் நல்வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதே நேரத்தில் திருமணமான நான்கே மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது? இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட விக்னேஷ் சிவன் பிறந்தநாளில் வெளியான புகைப்படத்தில் கூட நயன்தாரா கருவுற்றது போல புகைப்படத்தில் இல்லையே என்று ரசிகர்கள் கருத்து மோதலைத் தொடங்கிவிட்டனர்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் என்றும், அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறந்திருக்கலாம் என்றும், இது தனிமனித சுதந்திரம், இதைப்பற்றி நாம் ஏன் விவாதிக்க வேண்டும் என்றும் விக்னேஷ் சிவன் டிவிட்டர் பதிவுக்கு கீழே கருத்து மழை பொழிந்து வருகிறார்கள் ரசிகர்கள். அதே போல 4 மாதங்களுக்கு முன்பு திருமணமான தம்பதி எப்படி இப்போது குழந்தை பெற இயலும் ? வாடகைத் தாயாக இருந்தாலும் அதற்கும் பத்து மாதங்கள் வேண்டும் அல்லவா என்றும் விவாதங்கள் களைகட்டுகிறது. மேலும் திருமணத்திற்கு முன்னதாகவே வாடகைத் தாய் குழந்தைக்கான சட்டபூர்வ நடவடிக்கையில் இருவரும் இறங்கிவிட்டிருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் வாடகைத் தாய் என்றால் என்ன? இந்திய சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி நாம் சட்டபூர்வமாகவே ஆராய்வோம். இந்தியாவில், செயற்கை இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் மற்றும் வாடகைத் தாய் சட்டம் 2021 கடந்த ஜனவரி மாதம் 2022 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது. வாடகைத் தாய் முறைப்படுத்துதல் சட்டமானது, மக்களவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு, பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் சட்டமாக அமலுக்கு வந்தது.

வாடகைத் தாய் என்றால் என்ன?

செயற்கை இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் (ART) மற்றும் வாடகைத் தாய் சட்டம் 2021-ன்படி, மருத்துவ காரணங்களுக்காகவும், குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் தம்பதியர், ஒரு பெண்ணின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். அப்படி பிறக்கும் குழந்தை, அந்த விருப்பத் தம்பதியரின் உயிரியல் குழந்தையாகவே சட்டபூர்வமாக கருதப்படும். இதுபோன்ற ஒப்பந்தத்தின் கீழ் வாடகைத் தாய் மூலம் உருவாகும் குழந்தையை கருக்கலைப்பு செய்வது என்பது, வாடகைத் தாய் மற்றும் உரிய அதிகாரிகள் ஒப்புதலுடன், மருத்துவ விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதற்கான மருத்துவ சான்றுகளையும் தம்பதி சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.


அதே நேரத்தில், வணிக நோக்கில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி, வாடகைத் தாயின் கருவில் இருக்கும் குழந்தையைத் தீர்மானித்தல், வாடகைத் தாயை பல்வேறு விதங்களில் துன்புறுத்துதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது வணிக நோக்கில் வாடகைத் தாயாக இருப்பது, கருமுட்டைகளை விற்பது, வாடகைத் தாய் குழந்தைகளை கைவிடுவது போன்ற செயல்களைச் செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான விதிகள்

புதிய சட்டத்தின் கீழ், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி, திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு குழந்தை எதுவும் உயிருடன் இருக்கக் கூடாது. இந்த தம்பதியின் வயதும் 25 முதல் 55க்குள் இருக்க வேண்டும். மருத்துவம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாமை தொடர்பாக உரிய மருத்துவ சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.


யார் வாடகைத் தாயாக இருக்கலாம்?
வாடகைத் தாயாக இருக்க விரும்புபவர், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியின் நெருங்கிய உறவினராகவும், 25 – 35 வயதுக்கு உட்பட்டவராகவும் மருத்துவ ரீதியில் வாடகைத் தாயாக இருப்பதற்கு உரிய உடல் தகுதியை கொண்டிருப்பவராகவும் இருத்தல் அவசியம். தம்முடைய வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டுமே அவர் வாடகைத் தாயாக இருக்க முடியும். ஒரு கைம்பெண் அல்லது விவாகரத்து பெற்ற ஒரு பெண், வாடகைத் தாயாக இருக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. ஆனால் அவர் 35 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டியது அவசியம். தனியாக வாழும் ஆண், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியற்றவராவார்.

செயற்கை இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் (ART) சட்டமானது, கருவுறுதலுக்கு தேவையான விந்தணு மற்றும் கருமுட்டைகளை கையாளுதல், பாதுகாத்தல், விந்தணு மற்றும் கருமுட்டை தானங்கள், செயற்கை கருத்தரித்தல் அதற்கான சட்டபூர்வ நடைமுறைகள், அதனை மீறிவோருக்கான தண்டனைகள் பற்றி பேசுகிறது. 

“பரம் பரம் பரமசுந்தரி”

ஏ.ஆர். ரஹ்மானின் ஹிட் பாடல்களில் ஒன்றான “பரம் பரம் பரமசுந்தரி” பாடலை பலமுறை கேட்டவரா நீங்கள். அந்த படம் இடம்பெற்ற இந்தி படமான “மிமி” (Mimi) வாடகைத் தாய் , வாடகைத் தாய் குழந்தை, வாடகைத் தாய் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோரின் மனநிலை பற்றி விரிவாக, தெளிவாக பேசும் படமாக அமைந்துள்ளது. வாடகைத் தாய் சட்டம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எப்படி இந்திய பெண்களை வாடகைத் தாயாக பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள், போன்றவற்றையும் அந்த திரைப்படம் வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது.

விளக்கம் கோர அரசு உறுதி

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகளின் இரட்டைக் குழந்தை சர்ச்சை பற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ” 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கருமுட்டை தரலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில் இருக்கலாம் என்றும் டி.எம்.எஸ். இடம் சொல்லி இது சரியான முறையில் தான் நடந்ததா என்று விசாரிக்கப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஊரும் உலகமும் என்ன சொன்னாலும், திருமணமான 4 மாதத்தில் இரட்டை குழந்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டவர்களுக்கு நிச்சயம் அதன் பின்விளைவுகள், சட்ட வளைவுகள் தெரியாமல் இருக்காது. அதனால் அந்த நட்சத்திர தம்பதியே, தங்கள் குழந்தைகளைப் பற்றிய விவரங்களை அறிவிக்கும் வரை பொறுத்திருப்போம்.

-ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வீடியோ பதிவு செய்துவிட்டு காவலர் தற்கொலை

Halley Karthik

காஞ்சிபுரம் கல்குவாரியில் மீண்டும் தொடங்கிய மீட்பு பணிகள்..!

Jayapriya

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு?

Mohan Dass