நயன்தாரா – விக்னேஷ் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்களா? என்பது குறித்து மருத்துவக்கல்வி இயக்குநரகம் மூலம் விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வெள்ளி விழா அரங்கில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு மருத்துவப் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய மருத்துவமனைகளில் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளிலும் இது போன்ற ரோபோடிக்ஸ் மருத்துவம் மத்திய அரசின் சார்பில் பயன்பட்டு வருகிறது. ரோபோடிக்ஸ் சிகிச்சை மூலம் ஓமந்தூரார் மருத்துவமனையில் 70 அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அண்மை செய்தி : நயன்தாராவின் இரட்டை குழந்தை: வாடகைத் தாய் குழந்தை பற்றி சட்டம் சொல்வது என்ன?
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், டாக்டர் சண்முக சுந்தரம் இருக்கை என்ற பெயரில் ஒரு புதிய இருக்கை இன்று தொடங்கப்பட்டுள்ளது என்றும் இதுவரை எந்த பல்கலைக்கழகமும் இப்படி ஒரு இருக்கை தொடங்கப்பட்டது இல்லை என்றும் கூறினார். ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு மருத்துவம் சேலம் விநாயகா மிஷன் சார்பில் இந்த இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பேராசிரியராக இங்கிலாந்தில் பணி புரியும் அருள் இமானுவேல் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது விதிமுறைக்கு உட்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கருமுட்டை தரலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில் இருக்கலாம் என்றார். மேலும் இது தொடர்பாக மருத்துவக்கல்வி இயக்குநரகம் மூலம் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என பதிலளித்தார்.
எமர்ஜென்ஸி மருந்துகள், சிறப்பு மருந்துகள் இரண்டும் தனி தனியாக 300க்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளது. மருந்துகள் இருப்பு குறித்து மருந்து கிடங்கில் நேரடியாக ஆய்வு செய்து கொள்ளலாம். வெளிப்படை தன்மையுடன் நடக்கும் அரசு இது எனவே யார் வேண்டுமானாலும் சரி பார்க்கலாம் என அவர் தெரிவித்தார்.