நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் முறை தடை செய்யப்பட்டிருப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். சுமார் 7 ஆண்டு காதலுக்கு பிறகு ஜூன் மாதம் 9-ம் தேதி இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று வந்த இந்த ஜோடி, சினிமாவிலும் பிசியாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நயன்தாரா குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படுவதாகவும், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவியது. இந்த பரபரப்புக்கு நடுவே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக இணையதளங்களில் நேற்று விக்னேஷ் சிவன் அறிவித்தார். திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என ஏராளமானோர் கேள்வி எழுப்பியதால் இந்த விவகாரம் பேசு பொருளாக மாறியது.
இதையும் படியுங்கள் : ஆதாமா….யாரு? – ஜி.பி.முத்து கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்
ஆனால், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி டிவிட்டரில் இது தொடர்பாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டள்ளார். இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம் என பதிவிட்டுள்ளார். இதனால் நடிகை நயன்தாரா தடையை மீறி குழந்தை பெற்றுக்கொண்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-இரா.நம்பிராஜன்








