“தமிழக மாணவர்களின் கல்வி நலனுக்காக நவோதயா பள்ளிகளைத் திறக்க தவெக முன்வர வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!

தமிழக மாணவர்களின் கல்வி நலனுக்காக நவோதயா பள்ளிகளைத் திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழகத்தில் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான, இலவசக் கல்வியை வழங்கும் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதை வரவேற்கிறோம். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தவெக அரசு, முந்தைய திமுக அரசின் பிடிவாதப் போக்கைத் தொடராமல், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறப்பதற்கான முறையான ஏற்பாடுகளைச் செய்ய முன்வர வேண்டும்.

மும்மொழிக் கொள்கை என்பது இந்தி திணிப்பு அல்ல என்றும், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு மூன்றாவது மொழியையும் தேர்வு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றமே தெளிவாக விளக்கியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு, பழைய வெற்று அரசியல் காரணங்களைத் தவிர்த்துவிட்டு, மாணவர்களின் கல்வி நலனை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு தவெக அரசு செயல்பட வேண்டும்.

நீதிமன்ற உத்தரவின்படி, மூன்று வாரங்களுக்குள் முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, நவோதயா பள்ளிகளுக்கான நிலங்களையும் உடனடியாகக் கண்டறிய வேண்டும். ஏழை மாணவர்களின் கல்வி உரிமையையும் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்தையும் முன்னிறுத்தி, இப்பள்ளிகளைத் தொடங்கப் போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.