2வது ஒருநாள் போட்டி : இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி!

இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காமில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களுக்கு எடுத்துள்ளது. இந்திய அணியில் விராட் கோலி 65 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 66 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர், அட்கின்சன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. இறுதியில் 44.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.