நடிகர் விஜயின் தவெக தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை வென்றுள்ளது. ஆட்சியமைக்க தவெகவிற்கு 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்கிடையில் நேற்று 5 எம்.எல்.ஏக்களை கொண்ட காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து நேற்று தமிழ் நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை பெற்று வருமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.
ஆளுநரின் செயல் அரசியலைமைப்பிற்கு எதிரானது என்றும் மரபு படி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பாமக, விசிக மற்றும் இடது சாரிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.
இந்த நிலையில் தவெகவிற்கு ஆட்சியமைக்க வேண்டிய பெரும்பான்மை இல்லை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “தமிழ்நாட்டின் மாண்புமிகு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை, இன்று (07.05.2026) சென்னை, லோக் பவனுக்கு அழைத்தார். இச்சந்திப்பின் போது, ஆட்சி அமைப்பதற்கு இன்றியமையாததான, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேவைப்படும் பெரும்பான்மை ஆதரவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் விளக்கினார்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







