மதுரை காவல் மரண வழக்கு : சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை செக்கானூரணியில் காவல் மரண வழக்கில் காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளின் 2 நகல்களை சமர்ப்பிக்க, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை சொக்கானூரணி காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவர், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பேசுபொருளானது. இதனிடையே, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மனைவி சுதா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “விசாரணைக்காகச் சென்ற எனது கணவர் பாலகிருஷ்ணன், செக்கானூரணி காவல் நிலையக் கழிவறையில் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது உடற்கூராய்வு அறிக்கையில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எனது கணவர் உயிரிழப்பதற்கு முன்பாக அவர் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என்பதை நிரூபிக்க இவை போதுமானவையாக உள்ளன.

எனவே, செக்கானூரணி காவல் நிலையக் கழிவறையில் இருந்து எனது கணவரின் உடல் அகற்றப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளைப் பாதுகாத்து வைக்கவும், செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பாதுகாத்து, அவற்றின் நகல்களை வழங்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், “உடற்கூராய்வு அறிக்கையில் உடலில் காயங்கள் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. சில காட்சிகள் மட்டும் ஊடகங்களில் வெளியாகின” எனத் தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பான காட்சிகள் நீதிபதி முன்பாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும், “அவரது சட்டையைக் கொண்டு அவர் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உடற்கூராய்வுக்கு முன்பாக ஸ்கேன் மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. எந்தச் சம்மனும் வழங்கப்படாமல் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். லாரி தீப்பற்றிய சம்பவம் தொடர்பாக அவர் தாமாகவே சென்று புகார் அளித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு ஆவணங்களைப் பார்வையிட்ட நீதிபதி, “சிசிடிவி காட்சிகளில் பதிவான நேரத்துடன் ஒப்பிடுகையில், வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் உள்ள டிஜிட்டல் கையொப்பம் 14ஆம் தேதியைக் காட்டுகிறது. அவ்வாறெனில், அவரது இறப்புக்குப் பிறகு சுமார் 4 மணி நேரம் கழித்தே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

அரசுத் தரப்பில், “நவம்பர் 3ஆம் தேதி தீ விபத்து நடந்தது. தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாலகிருஷ்ணன் எந்தப் புகாரையும் அளிக்கவில்லை. டெலிவரி நிறுவனம்தான் புகார் அளித்தது” எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், “கண்டெய்னரில் 162 பைகளில் ஏலக்காய் இருந்தன. அவற்றில் 67 பைகளைக் காணவில்லை” என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி, “முறையாக விசாரித்திருந்தால், அவற்றை நீங்களே கண்டுபிடித்திருக்கலாமே?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, “வாலாந்தூர், செக்கானூரணி காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகள் 2ஆம் தேதி முதல் சேகரிக்கப்பட்டு சிபிசிஐடி-யிடம் வழங்கப்பட்டுள்ளன. உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் 13, 14ஆம் தேதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகள் டிஎஸ்பியால் பாதுகாக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, “சிசிடிவி காட்சிகளை மனுதாரருக்கு வழங்குவதில் என்ன சிக்கல்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு, “மனுதாரருக்கு வழங்குவது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில், “விசாரணை சிபிசிஐடி வசம் இருப்பதால், சிசிடிவி காட்சிகளை வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, “அவ்வாறெனில், குறிப்பிட்ட சில காட்சிகள் மட்டும் ஊடகங்களில் வெளியானது எப்படி? அவற்றைக் கசியவிட்ட அதிகாரி யார்? அனுமதியின்றி காட்சிகள் வெளியாக வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் 13, 14ஆம் தேதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளின் 2 நகல்களைச் சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதி, வழக்கை நவம்பர் 20ஆம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.