பல ஆண்டுகளாகவே வெளிநாட்டில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களின் முக்கியத் தேர்வாக அமெரிக்கா இருந்து வருகிறது. குறிப்பாக, உயர்கல்வியுடன் வேலைவாய்ப்பையும் எதிர்பார்த்து ஏராளமான இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்து வந்தனர். ஆனால், தற்போது அங்கு நிலவும் விசா நிச்சயமற்ற தன்மை, வேலைவாய்ப்புச் சந்தையில் உள்ள சவால்கள் மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அமெரிக்காவைத் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
2025-26 கல்வியாண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்து 3,39,435 ஆக உள்ளது. அதேபோல், சீன மாணவர்களின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்து 2,54,458 ஆகப் பதிவாகியுள்ளது. அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் சர்வதேச மாணவர் சேர்க்கை தொடர்பாக, சர்வதேச கல்வி நிறுவனம் (Institute of International Education – IIE) நவம்பர் 16-ம் தேதி வெளியிட்ட ‘Open Doors 2026’ அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புதிதாகச் சேரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை 18% சரிவு!
மொத்த மாணவர்களின் எண்ணிக்கையைவிட, முதன்முறையாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே படித்துக் கொண்டிருப்பவர்களையும் உள்ளடக்கிய மொத்த எண்ணிக்கையைவிட, புதிதாக அமெரிக்காவைத் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அந்நாட்டின் கல்வி மீதான ஆர்வத்தைத் தெளிவாக வெளிப்படுத்தும்.
அந்த வகையில், 2025-26 கல்வியாண்டில் அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் புதிதாகச் சேர்ந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 18 சதவீதம் சரிந்து 2,28,123 ஆக உள்ளது.
மேலும், 800-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட ‘Fall 2026 Snapshot’ ஆய்வின்படி, நடப்பு கல்வியாண்டிலும் சர்வதேச மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. அதன்படி, முதுகலை மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதமும், இளங்கலை மாணவர்களின் எண்ணிக்கை 3 சதவீதமும், விருப்பப் பயிற்சி நடைமுறையில் (Optional Practical Training – OPT) உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 6 சதவீதமும் குறைந்துள்ளது. புதிதாகச் சேரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையும் முந்தைய இலையுதிர் காலத்துடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் சரிந்துள்ளது.
இந்திய மாணவர்களின் முதுகலை சேர்க்கை 34% வீழ்ச்சி!
இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஏனெனில், 2024-25 கல்வியாண்டில் அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவாக 3,63,019 ஆக உயர்ந்திருந்தது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அமெரிக்காவுக்கு அதிக மாணவர்களை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் சேர்ந்து அமெரிக்காவில் உள்ள மொத்த சர்வதேச மாணவர்களில் சுமார் 52 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவில் அதிக பாதிப்பு முதுகலைப் படிப்புகளில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைத் துறைகளில் முதுகலைப் படிப்புகளைத் தேர்வு செய்யும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 2025-26 கல்வியாண்டில் அமெரிக்காவில் பயிலும் இந்திய முதுகலை மாணவர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் சரிந்து 1,16,609 ஆக உள்ளது. அதேநேரத்தில், இளங்கலை மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 1 சதவீதம் குறைந்து 39,711 ஆகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெறுவது என்பது இந்தியக் குடும்பங்களைப் பொறுத்தவரை கல்வியில் முதலீடு செய்வது மட்டுமல்ல. அங்கு தொழில்முறை அனுபவம் பெறுவது, அதிக வருமானம் ஈட்டுவது மற்றும் நீண்டகாலமாக வெளிநாட்டில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளைப் பெறுவது போன்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. ஆனால், அமெரிக்காவில் கல்விக் கட்டணம் அதிகமாக இருக்கும் நிலையில், படிப்பை முடித்த பிறகு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயமற்றதாக இருப்பது மாணவர்களின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
OPT பிரிவில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 27% உயர்வு!
இந்திய மாணவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால், ஏற்கெனவே அமெரிக்காவில் படிப்பை முடித்து விருப்பப் பயிற்சி நடைமுறையில் (OPT) பணியாற்றி வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இந்தச் சரிவைக் கட்டுப்படுத்தியுள்ளது. 2025-26 கல்வியாண்டில் OPT பிரிவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்து 1,82,201 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கணக்கிடப்பட்ட மொத்த இந்திய மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பிரிவில் உள்ளனர்.
அதேபோல், சீன மாணவர்களின் எண்ணிக்கையும் பல்வேறு பிரிவுகளில் சரிவைச் சந்தித்துள்ளது. சீன முதுகலை மாணவர்களின் எண்ணிக்கை 5 சதவீதம் குறைந்து 1,14,043 ஆகவும், இளங்கலை மாணவர்களின் எண்ணிக்கை 5 சதவீதம் குறைந்து 74,594 ஆகவும் உள்ளது. OPT பிரிவில் உள்ள சீன மாணவர்களின் எண்ணிக்கை 1 சதவீதம் சரிந்து 61,545 ஆகப் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவில் சர்வதேச முதுகலை மாணவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் குறைந்து 4,23,078 ஆக உள்ளது. குறிப்பாக, முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் சரிந்துள்ளது. அதேநேரத்தில், முனைவர் பட்டப்படிப்பு (PhD) மாணவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இளங்கலை மாணவர்களின் எண்ணிக்கை பெரிய மாற்றமின்றி 3,56,165 ஆக உள்ளது.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருளாதாரப் பாதிப்பு!
வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவது அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கையை மட்டுமல்லாமல், அவற்றின் வருவாய் மற்றும் ஆராய்ச்சித் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்கள் கல்விக் கட்டண வருவாய், ஆராய்ச்சித் திறன் மற்றும் திறமையான பட்டதாரிகள் என அமெரிக்கக் கல்வி நிறுவனங்களுக்குப் பல்வேறு வகைகளில் பங்களித்து வருகின்றனர். அமெரிக்க வர்த்தகத் துறையின் தகவலின்படி, 2025-ம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு சுமார் 56 பில்லியன் டாலர் பங்களித்துள்ளனர்.
இருப்பினும், வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. ‘Fall 2026 Snapshot’ ஆய்வில் பங்கேற்ற கல்வி நிறுவனங்களில் 75 சதவீதம், சர்வதேச மாணவர்களால் கல்வி வளாகங்களில் பல்வேறு நாடுகளின் கலாசார மற்றும் அறிவுசார் பார்வைகள் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளன. மேலும், 60 சதவீத கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்களின் நிதிப் பங்களிப்பு முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளன. 91 சதவீத கல்வி நிறுவனங்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் சர்வதேச மாணவர்களைச் சேர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, கணினி அறிவியல் படிப்புகளுக்கு 75 சதவீத கல்வி நிறுவனங்களும், பொறியியல் மற்றும் உயிரியல் அறிவியல் படிப்புகளுக்கு தலா 59 சதவீத கல்வி நிறுவனங்களும் முக்கியத்துவம் அளிக்கின்றன. 2025-26 கல்வியாண்டில் அமெரிக்காவில் பயிலும் சர்வதேச மாணவர்களில் 57 சதவீதம் பேர் STEM துறைகளைச் சேர்ந்தவர்கள். கணிதம் மற்றும் கணினி அறிவியல் படிப்புகளில் 2,86,168 மாணவர்களும், பொறியியல் படிப்புகளில் 2,14,193 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
சில நாடுகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!
அனைத்து நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. முதல் 25 இடங்களில் உள்ள மாணவர்களை அதிகம் அனுப்பும் நாடுகளில் 9 நாடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மாணவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளன. அந்த வகையில், வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், வியட்நாம் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள சரிவு அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக இல்லை என்பதும், சர்வதேச உயர்கல்வித் தேர்வுகளில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச கல்வி நிறுவனத்தின் (IIE) தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜேசன் சிஸ் கூறுகையில், சர்வதேசக் கல்வி தொடர்ந்து அமெரிக்கக் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதுடன், மாணவர்கள் கல்வி வளாகங்களை விட்டு வெளியேறிய பிறகும் நீடிக்கும் சர்வதேச உறவுகளை உருவாக்க உதவுகிறது என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி உதவித்தொகையுடன் படிக்கும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை 2024-25 கல்வியாண்டில் 5 சதவீதம் அதிகரித்து 3,13,824 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகள் அமெரிக்க மாணவர்களின் முக்கியக் கல்வி இலக்குகளாக உள்ளன.




