தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர்:முதலமைச்சர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார், யார் குற்றாவளிகளோ அவர்கள் நிச்சயாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார், யார் குற்றாவளிகளோ அவர்கள் நிச்சயாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தப் பிரச்சனையை அப்போதைய அ.தி.மு.க. அரசு சரியாக கையாளவில்லை. மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டு அறிய அன்றைக்கு அந்த அரசு தயாராக இல்லை. அது மட்டும் அல்லாமல் ஊர்வலமாக வந்த மக்கள் மீது பலத்தை பயன்படுத்தி கலைப்பதற்கு திட்டமிட்டார்கள்.

துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்து வெளியிட்டுள்ளது. 11 ஆண்கள் இரண்டு பெண்கள் என 13 பேர் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். 40 பேர் பலத்த காயங்களை அடைந்துள்ளனர். அன்றைய முதல்-அமைச்சர் பழனிசாமியின் எதேச்சதிகாரத்திற்கு அந்த சம்பவம் எடுத்துக்காட்டாய் உள்ளது. நானும் சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என பழனிசாமி கூறியது யாரும் மறந்திருக்க முடியாது.

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்க “கடப்பாரைய முழுங்கிட்டு கசாயம் குடிச்சிடுவாங்க”ன்னு அந்த அளவிற்கு மிகப்பெரிய பொய்யை அவர் அன்று சொல்லியுள்ளார். இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால் சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர், அப்போதைய டிஜிபி, அப்போதைய உளவுத்துறை ஐஜி ஆகியோர் தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களை நிமிடத்திற்கு நிமிடம் அன்றைய முதல்வரிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்கள். ஊடகங்களைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்பது மிகத்தவறு. அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே சொல்லி விட்டது.

அந்த ஆணையம் நம்மால் அமைக்கப்பட்டது அல்ல. அவர்கள் அமைத்த ஆணையம் தான். ஒருவேளை அதை நாம் அமைத்திருந்தால், இதில் அரசியல் இருக்கிறது என்றுகூட சொல்லியிருக்கலாம். ஆனால், அவர்கள் அமைத்த ஆணையமே சொல்லியிருக்கிறது. நேற்றைக்கு தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அறிக்கைகளுமே, அவர்கள் அமைத்த ஆணையங்களால் அளிக்கப்பட்ட அறிக்கைகளாகும். நாம் வந்து எந்த ஆணையமும் இதற்காக அமைக்கவில்லை.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தூத்துக்குடி கொடூரம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. நிர்வாகத்தை நடத்தக்கூடிய அதிகாரிகளாக இருந்தாலும், சட்டம்-ஒழுங்கைக் காக்கக்கூடிய காவலர்களாக இருந்தாலும், மனிதாபிமானம் கொண்டவர்களாக, மக்கள் சேவகர்களாக மட்டுமே நடந்து கொள்ள வேண்டுமே தவிர, வேறு மாதிரியாக நடந்து கொள்வது மனிதத் தன்மைக்கே விரோதமானது என்பதை உணர வேண்டும்.

அதிகாரமும், சட்டமும் மக்களைக் காக்கவே என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஏதோ இப்பொழுது சொல்கிற உறுதிமொழி அல்ல; ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தேர்தல் நேரத்தில் சொன்ன உறுதிமொழிதான். யார், யார் குற்றவாளிகளோ, அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள்  என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.