தீரன் பட பாணியில் செருப்பை வைத்து கொலையாளிகளை பிடித்த காவல்துறை

தேனி கம்பம் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சம்பவ இடத்தில் விட்டுச்சென்ற செருப்பை வைத்து கொலையாளிகளைக் கண்டுபிடித்துள்ளது காவல்துறை. “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பவாரியா கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் நடிகர்…

தேனி கம்பம் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சம்பவ இடத்தில் விட்டுச்சென்ற செருப்பை வைத்து கொலையாளிகளைக் கண்டுபிடித்துள்ளது காவல்துறை.

“தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பவாரியா கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் நடிகர் கார்த்திக் ஈடுபடுவார். ஒரு வீட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்கள் செருப்பை விட்டு சென்று விடுவார்கள். அதனை கைப்பற்றி பவாரியா கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் நடிகர்கள் கார்த்திக், போஸ் வெங்கட் ஈடுபட்டவது போன்ற காட்சிகள் இடம் பெறும்.

இதே போல தேனி கம்பம் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சம்பவ இடத்தில் விட்டுச் செருப்பை வைத்து கொலையாளிகளைக் கண்டுபிடித்துள்ளது காவல்துறை. தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுருளிவேல் (52). இவர் ட்ரை சைக்கிள் வாகனத்தில் சென்று பன், ரொட்டி, கேக் உள்ளிட்ட பொருட்களைக் கிராமம் மற்றும் நகரப் பகுதியில் விற்பனை செய்து வந்தார். வழக்கம் போல கம்பம்மெட்டு காலனி பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் இலவசமாக கேக் கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. “ஓசியில்” கேக் தரமுடியாது என சுருளிவேல் மறுத்தார். வாக்குவாதம் முற்றியதால் அருகே இருந்த கல்லை எடுத்து சுருளிவேலை அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சுருளிவேல் கீழே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த கம்பம் வடக்கு காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சுருளிவேலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கம்பம் வடக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த இடத்தில் கொலையாளிகள் அணிந்திருந்த செருப்பை விட்டுச் சென்றனர். இதனைக் கைப்பற்றிய போலீசார் யாருடையது என்பது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் செருப்பை வைத்தே காவல்துறையினர் அடுத்த கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனும், அவரது நண்பர் 17 வயது சிறுவனும் சேர்ந்து தான் கொலை செய்தது தெரிய வந்தது.

சுருளிவேலுவிடம் இலவசமாக கேக் கேட்டபோது தர மறுத்ததால் கொலை செய்ததாகக் கைதான 2 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஓசியில் கேக் தர மறுத்த வியாபாரியைச் சரமாரியாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.