கேரளாவில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உண்ணாவிரத்தில் தொ டங்கி அமைச்சர் தகுதிநீக்கம் வரை நடைபெற்ற மோதல்களை சற்று விரிவாக பார்க்கலாம்.
2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கேரள மாநில ஆளுநர் அலுவலகத்திலிருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில் வரதட்சணைக்கு எதிராக ஆளுநர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போவதாக குறிப்பிட்டிருந்தது. அறிக்கையின் படி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஆளுநர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதமும் இருந்தார். இந்தியாவில் ஆளுநர் ஒருவர் உண்ணாவிரதம் இருப்பது முதல்முறை என்பதால் தேசியத்தின் பார்வை கேரளா பக்கம் திரும்பியது. 
உண்ணாவிரதத்தின் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சூருக்கு வருகை தந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத்தை ஆளுநர் ஆரிப் சந்தித்தது மற்றொரு சர்ச்சையை கிளப்பியது. ஆனால், செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆர்.எஸ்.எஸ் தலைவரை சந்தித்ததில் தவறு இல்லை எனவும், கடந்த காலத்தில் தாமே ஆர்.எஸ்.எஸ் தான் என விளக்கமளித்தார். இப்படி கேரளாவில் ஆளும் மாநில அரசுக்கும் ஆளுநருக்குமான மோதல்களும் முரண்பாடுகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன. 
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றை சுட்டிக்காட்டி, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் UGC விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அதிரடி உத்தரவை ஆளுநர் ஆரிப் முகமது கான் அண்மையில் பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி வேந்தர் பதவியிலிருந்தே ஆளுநரை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், நிகழ்ச்சி ஒன்றில் உத்திரப்பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு கேரளத்தை பற்றி தெரியாது என கடந்தகால சம்பவம் ஒன்றை குறிப்பிட்டு பேசினார்.
நிதியமைச்சர் தம்மை தான் தாக்கி பேசியிருப்பதாகவும், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என முதலமைச்சருக்கு ஆளுநர் ஆரிப் கான் கடிதம் அனுப்பினார். ஆனால் முதலமைச்சர் பினராயி விஜயனோ, நிதியமைச்சர் யார் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை என கூறி ஆளுநரின் கடிதத்தை நிராகரித்து விட்டார். 
ஏற்கனவே லோக் ஆயுக்தா, பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரம் குறைப்பு உள்ளிட்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் உள்ளன. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் மாநில அரசை மிரட்டுவதாக பல மாநிலங்களின் பிரதான புகாராக உள்ளது.
தமிழ்நாடு, மேற்குவங்கம், தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநர் – அரசு மோதல் இருந்தாலும் கேரளாவில் நடைபெறும் மோதல் என்பது ஒரு படி மேலானது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.







