கோவை கார் சிலிண்டர் வெடிப்பு; என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி…

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெரோஸ் ஏற்கனவே கேரளா சிறையில் உள்ளவர்களை சந்தித்து பேசியது விசாரணையில் தெரியவந்தது.

என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரளாவில் சிறையில் உள்ள ரசித் அலி மற்றும் முகமது அசாருதீன் போன்றோரை பெரோஸ் சந்தித்து உள்ளார். இதில் அசாருதீன் என்பவர் 2019ல் இலங்கை தேவாலயத் தாக்குதலுக்கு காரணமான அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டவர். மேலும் சிறையில் அவர்களுடனான சந்திப்பில் என்ன நிகழ்ந்தது என பெரோஸிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த இஸ்லாமிய பிரச்சார இயக்க நிர்வாகி
முகமது காதர் மன்பை மற்றும் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது உசேன் மன்பை ஆகிய இருவரிடம் நெல்லை காவல்துறையினர் சுமார் 3மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சில ஆவணங்கள், லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டு விசாரணைக்கு எடுத்து
செல்லபட்டு பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.குறிப்பாக பேருந்து நிலையத்தில் உள்ள பல அடுக்கு வாகன நிறுத்தத்தில் மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் மர்ம பொருட்களை ஏதேனும் உள்ளதா என சோதனையிட்டனர். பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகன உரிமையாளர்களின் விவரங்களையும் காவல்துறை சேகரித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.