9 பல்கலைகழக துணைவேந்தர்கள் ராஜினாமா செய்யமாட்டார்கள் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி யுஜிசி விதிகளை மீறி நியக்கப்பட்டுள்ளதாக கூறி அவரின் நியமனத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
அந்த மாநிலத்தில் உள்ள மேலும் சில பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள், யுஜிசி விதிமுறைகளக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அந்த பல்கலைகழகங்களின் துணை வேந்தர்களின் நியமனமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதையடுத்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி, மாநிலத்தில் உள்ள 9 பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் ராஜிமானா செய்ய வேண்டும். அக்.24ம் (இன்று) காலை 11.30 மணிக்குள் அனைவரும் ராஜினாமா கடிதங்களை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் பினராய் விஜயன் பாலக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், துணை வேந்தர்கள் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் பதவியை தவறாக பயன்படுத்துதல் அல்லது தவறாக செயல்படுதல் போன்ற குற்றங்கள் காணபட வேண்டும். அப்படி ஒன்றும் இல்லாமல் பணிநீக்கம் அல்லது ராஜினாமா செய்ய முடியாது. இது நிர்வாக துறை, நீதி துறை தான் முடிவு எடுக்க வேண்டும். இதில் ஆளுநர்கள், வேந்தர்களுக்கும் நடவடிக்கை எடுக்க முடியாது. இது கூட தெரியாமல் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
ஆளுநர் செயல்பாடு ஜனநாயக முறையை மீறும் செயலக உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசும், சுதந்திரமாக செயல்பட வேண்டிய பல்கலைக்கழகங்களும் உள்ள அதிகாரத்தில் நுழையும் இந்த செயலை ஏற்று கொள்ள முடியாது.
ஆளுநரின் இது போன்ற செயல்பாட்டை உடனே நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற விதியை மீறி ஆளுநர் செயல்படுகிறார். ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காமல், அவர்கள் நிலையை கேட்கமால் யாரையும் பதவியை விட்டு விலக செய்ய முடியாது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.







