ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும், கன்னட சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ள காந்தாரா திரைப்படம் வசூலிலும் சாதனைப் படைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இணையாக, இந்தியளவில் தற்போது பேசுப்பொருளாகியுள்ள ஒரு திரைப்படம் தான் காந்தாரா. அதிக பொருட்செலவோ, அதிரிபுதிரியான ப்ரோமோஷன்களோ இல்லாமல், சாதாரண பிராந்திய மொழி படமாக வெளியான காந்தாரா, தனது வலுவான கதையின் மூலம் தற்போது பான் இந்தியா (PAN INDIA) திரைப்படமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் சூப்பர் ஹிட்டாகும் திரைப்படங்களை சீன் பை சீன் அப்படியே ரீமேக் செய்வது. இல்லாவிட்டால் மசாலா காட்சிகள் தூக்கலான சுமாரான படங்களை எடுத்து குவிப்பது. இதுதான், கன்னட சினிமா குறித்த பலரது பார்வையாக இருந்து வந்தது. ஆனால், இதெல்லாம் 2018ம் ஆண்டு வரைதான். அந்த ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம், அசுர வெற்றி பெற்று, இந்திய திரையுலகில் கன்னட சினிமாவின் இடத்தை அழுத்தமாக பதிவு செய்தது.
அந்த படத்தை தொடர்ந்து, கருட கமனா ரிஷப வாகனா, சார்லி 777 போன்ற தரமான படங்களை அடுத்தடுத்து வழங்க தொடங்கியது கன்னட சினிமா. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள படம் தான் ”காந்தாரா”. கர்நாடகாவின் மூலையில் உள்ள ஓர் மலைக்கிராமம், அந்த கிராமத்தின் மக்களுக்கு மன்னர் ஒருவர் நிலத்தை தானமாக வழங்குகிறார். அவருக்கு பின்னால் வரும் அவரின் வாரிசுகள் அந்த நிலத்தை மக்களிடம் இருந்து பிடுங்க முயற்சிக்கின்றனர். கடைசியில் அந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பதே காந்தாராவின் கதை.
பழங்குடியின மக்களின் வழிபாடு, வாழ்க்கை முறை, கம்பளா என்ற எருமை பந்தயம், பூத கோலா என்ற நாட்டுபுற நடனம் என படம் முழுக்க முழுக்க யாதார்த்தத்திற்கு நெருக்கமாக இருப்பதால், அது இந்த அளவு வெற்றி பெற்றுள்ளது. வெறும் 16 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 200 கோடி ரூபாய் வசூலை கடந்து இன்றும் திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
https://twitter.com/rajinikanth/status/1585190099444469761
கர்நாடகாவில் அம்மாநில மக்களால் அதிகளவில் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையையும் காந்தாரா பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் இந்த திரைப்படத்தை பற்றி பாராட்டாத திரைப்பிரபலங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு அனைத்து தரப்பினரின் மனங்களையும் கவர்ந்துள்ளது காந்தாரா. நவம்பர் 2ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதால், மேலும் லட்சக்கணக்கான மக்களை இந்த படம் சென்றடைய உள்ளது.
இவ்வாறு படத்தைப் பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருக்க, மறுபுறம் இந்த படத்தில் இடம்பெற்ற வராஹ ரூபம் என்ற பாடல், நவரசம் என்ற ஆல்பத்தில் இருந்து திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த காந்தாரா படக்குழுவினர் ஒரே ராகத்தில் இரு பாடல்களும் அமைக்கப்பட்டுள்ளதால், ஒன்றுபோல தோன்றுவதாக தெரிவித்தனர்.
படத்தில் சில குறைகள் இருந்தாலும் காந்தாரா பெற்றுள்ள வெற்றி என்பது அசுரத்தனமான வெற்றி என்பதே நிதர்சனம். இந்த வெற்றி அடுத்தடுத்து தரமான பல படங்களை எடுக்க கன்னட திரையுலகினருக்கு உந்துசக்தியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.







