துருக்கி நிலநடுக்கம்; இஸ்தான்புல் புறப்பட்டது இந்தியாவின் முதல் நிவாரணக்குழு

துருக்கி மக்களுக்கு இந்தியா என்றுமே உறுதுணையாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்த நிலையில் இந்தியாவின் சார்பில் நிவாரணக் குழு இஸ்தான்புல்லுக்கு புறப்பட்டு சென்றது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப்…

துருக்கி மக்களுக்கு இந்தியா என்றுமே உறுதுணையாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்த நிலையில் இந்தியாவின் சார்பில் நிவாரணக் குழு இஸ்தான்புல்லுக்கு புறப்பட்டு சென்றது.

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி நாட்டிலும் சிரியாவிலும் நேற்று மட்டும் மொத்தம் 2300 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. துருக்கியில் பலி எண்ணிக்கை 1500, சிரியாவில் பலி எண்ணிக்கை 800 ஆக இருந்தது. இந்த நிலையில் அதிதீவிரமான நிலநடுக்கத்தால் இதுவரை 4000 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிகளை செய்து வருகின்றன. நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை ஐரோப்பிய ஒன்றியம் மீட்பு படையினரை அனுப்பியுள்ளது. இந்தியா தரப்பிலிருந்து மருத்துவர் குழு, அத்யாவசிய மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 100 வீரர்களை இந்தியா அனுப்பியுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலையும், இந்தியா துருக்கியுடன் நிற்பதாகவும் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளதாவது..

”துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் உடமைகள் இழந்து, பெரும் காயம்  அடைந்த நிகழ்வுகளை கண்டு வேதனை அடைந்தேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். துருக்கி மக்களுடன் இந்தியா என்றுமே நிற்கும்,  இந்த துயரத்திலிருந்து மீள அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்க தயாராக உள்ளது.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் இந்தியா தரப்பிலிருந்து பேரிடர் மீட்பு உதவி மற்றும் நிவாரணம் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் துருக்கியின் அனார்காவில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே இந்திய அரசு சார்பில் முதற்கட்டமாக மருத்துவ குழு மற்றும்  நிவாரணப் பொருட்கள் துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.