“இந்தியாவை பாராட்டிய ட்ரம்ப் : நல்லாட்சிக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!” – வானதி சீனிவாசன்

அமெரிக்காவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னுதாரணமாகக் குறிப்பிடும் அளவிற்கு உயர்ந்துள்ளது பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் குறைந்த வட்டி விகிதங்களும், சுமார் 7% GDP வளர்ச்சியும் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவும் இத்தகைய பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருப்பது, இந்தியாவின் பொருளாதார வலிமையை உலக அரங்கில் மீண்டும் பறைசாற்றியுள்ளது.

சர்வதேச வர்த்தகச் சவால்களையும், அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வு போன்ற நெருக்கடிகளையும் ராஜதந்திரத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் எதிர்கொண்டு, பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்திய பிரதமர் மோடி அவர்களின் தலைமைப் பண்பு பாராட்டுக்குரியது.

உலக அளவில் போர் சூழலால் ஏற்பட்ட பொருளாதாரச் சவாலான காலகட்டங்களிலும் எரிபொருள் சிக்கனம், தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடுதல், உள்நாட்டுப் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்தல் என நாட்டு மக்களிடம் பிரதமர் விடுத்த வேண்டுகோள்கள், தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கிய மக்கள் பங்களிப்பின் அவசியத்தை உணர்த்தின.

அதன்பின் மத்திய அரசின் வலுவான பொருளாதாரச் சீர்திருத்தங்கள், உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கம், முதலீடுகளை ஈர்த்தல், நிதி ஒழுக்கம், வலுவான சர்வதேச உறவுகள் என ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளே இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு வலுசேர்த்துள்ளன.

இது பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்குத் தலைமைக்கும், மத்திய அரசின் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சிக்கும், 140 கோடி இந்திய மக்களின் உழைப்புக்கும் கிடைத்த பெருமைமிகு அங்கீகாரம்!

இவ்வாறு உலக நாட்டுத் தலைவர்களே இந்தியாவைப் புகழ்ந்து வரும் வேளையில், அயல்நாட்டில் தாய்நாட்டை தாழ்த்திப் பேசும் ராகுல் காந்தி இனியாவது புரிந்து கொண்டு தேசத்தின் வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படட்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.