காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் தொடர்பான வழக்கில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (RAW) தலைவர் சாமந்த் கோயல் ஆகியோருக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தின் எழுத்தர், கடந்த வெள்ளிக்கிழமை ஃபெடெக்ஸ் (FedEx) மூலம் டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், திஸ் ஹசாரி நீதிமன்றம் மற்றும் துவாரகா மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றுக்கு இந்தச் சம்மன்களை அனுப்பியுள்ளார்.
ஹேக் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடவடிக்கை!
கடந்த நவம்பர் 13-ம் தேதி, அஜித் தோவல் மற்றும் சாமந்த் கோயலுக்கு சம்மன் பிறப்பிக்க நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக சர்வதேச அளவில் நீதிமன்ற ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வது தொடர்பான ஹேக் ஒப்பந்தம் (Hague Convention) மற்றும் இந்தியக் குடிமை நடைமுறைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் சுட்டிக்காட்டப்பட்டன. இந்த விவகாரத்தில், இந்திய நீதிமன்றங்களின் உதவியுடன் வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு நீதிமன்ற ஆவணங்களைச் சேர்க்குமாறு நீதிபதி கேத்ரின் போல்க் ஃபைலா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
ஹேக் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் மத்திய அதிகார அமைப்பு மூலமாகச் சம்மன்களை வழங்க மேற்கொள்ளப்பட்ட வழக்கமான முயற்சி நிராகரிக்கப்பட்டதாகவும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹேக் ஒப்பந்தத்தின் 19-வது பிரிவு மற்றும் இந்தியக் குடிமை நடைமுறைச் சட்டத்தின் அடிப்படையில் மாற்று வழியில் சம்மன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அஜித் தோவல் மீது பன்னுன் குற்றச்சாட்டு!
தடை செய்யப்பட்ட ‘சீக்கியர்கள் நீதிக்கான அமைப்பு’ (Sikhs for Justice) அமைப்பின் சட்ட ஆலோசகரான குர்பத்வந்த் சிங் பன்னுன், தன்னைக் கொலை செய்ய முயற்சி நடந்ததாகக் கூறி அமெரிக்காவில் சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரியும் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பைச் சேர்ந்தவர்களைப் பயன்படுத்தி, தன்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டத்தை அஜித் தோவல் தீட்டியதாகப் பன்னுன் குற்றம்சாட்டியுள்ளார். பல்வேறு பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் பன்னுனை இந்திய விசாரணை அமைப்புகள் தேடி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, கடந்த மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை மூலம் வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு ராஜதந்திரக் குறிப்பு அனுப்பி, அஜித் தோவல் மற்றும் சாமந்த் கோயலுக்கு சம்மன் வழங்க அமெரிக்க நீதிமன்றம் முயற்சி செய்தது.
இந்தியா கடும் எதிர்ப்பு!
பன்னுன் தொடர்ந்துள்ள இந்த வழக்கை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இதுகுறித்து நவம்பர் 10-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் மீதான ஜோடிக்கப்பட்ட மற்றும் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இதுபோன்ற அடிப்படையற்ற வழக்குகளையும் ஏற்க முடியாது. இந்தியாவில் நீதிமன்ற ஆவணங்களை வழங்குவதற்கான கோரிக்கைகள், இந்தியாவின் நியமிக்கப்பட்ட மத்திய அதிகார அமைப்பான சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்




