காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது, “2026ஆம் ஆண்டின் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டு (Adjourned Sine Die) இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவரால் முறைப்படி முடித்து வைக்கப்படுவது (Prorogation) இன்னும் நடைபெறவில்லை.
பிரதமர்–உள்துறை அமைச்சர் கூட்டணி, தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைத் திரட்டும் முயற்சியில் இன்னமும் ஈடுபட்டுள்ளது. அந்தப் பெரும்பான்மை எந்த அளவுக்குக் கறைபடிந்தது என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.
புதிய மசோதாவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறப் போகின்றன என்பது யாருக்கும் தெரியாது. ஏனெனில், பழைய மசோதா 2026 ஏப்ரல் 17ஆம் தேதி பெரும் பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
எந்தவொரு அரசியல் கட்சியுடனும் புதிய, உறுதியான முன்மொழிவுகள் குறித்து தீவிரமான மற்றும் முறையான ஆலோசனைகள் எதுவும் நடத்தப்படவில்லை. மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் பிரதமருக்கு நான்கு கடிதங்கள் எழுதியுள்ள நிலையிலும், இதுவரை அனைத்துக் கட்சிக் கூட்டம்கூட கூட்டப்படவில்லை.
நாட்டின் முன் பொருளாதாரம், அரசியல், சமூகம், ராணுவம் மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த மிக முக்கியமான, அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய சவால்கள் ஏராளமாக உள்ளன. இவற்றுக்குத்தான் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும். விரிவான மற்றும் தொலைநோக்குப் பார்வையிலான தொகுதி மறுவரையறையை இப்போதைக்குத் தள்ளிப்போடலாம்.
1976ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள் தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தார். 2001ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்படும் வரை, அதனை ஒத்திவைத்தார். அவர்கள் விவேகமிக்க, நாட்டின் நலனை முதன்மையாகக் கருதிய பிரதமர்களாக விளங்கினர்.
நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற FICCI மாநாட்டில் பிரதமர் அவர்கள் நாட்டின் பொருளாதார நிலை குறித்து மிகுந்த கவலையை வெளிப்படுத்தியிருந்தார். அவர் மனதளவில் பெரும் குழப்பத்திலும் பதற்றத்திலும் இருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய சூழலில் அவர் அவ்வாறு இருப்பது இயல்பானதும்கூட. பிரதமரைச் சூழ்ந்துள்ள இத்தகைய நெருக்கடிகள் மற்றும் மன அழுத்தங்களிலிருந்து விடுபட்ட, அமைதியான மனநிலையைக் கொண்டவர்களால்தான் தொகுதி மறுவரையறை குறித்த விவாதங்களையும் ஆலோசனைகளையும் முறையாக முன்னெடுக்க முடியும். இதற்காகப் பல்வேறு பங்குதாரர்களுடனும் விரிவான கலந்தாலோசனைகள் நடத்தப்படுவது அவசியமாகும்.
இத்தகைய சூழ்நிலையில், நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, மக்களவையின் தற்போதைய மொத்த உறுப்பினர் எண்ணிக்கையையும், மாநிலங்களுக்கான தற்போதைய பிரதிநிதித்துவ அமைப்பையும் அப்படியே தொடரச் செய்வதே பொருத்தமானதாக இருக்கும். தற்போதுள்ள மாநிலவாரியான தொகுதிப் பங்கீட்டிலேயே பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பெரிதும் விளம்பரப்படுத்தப்படும் ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற இலக்கு எட்டப்படும் வரை இந்த ஏற்பாடு மாற்றமின்றித் தொடர வேண்டும். அந்த இலக்குக்கு அளிக்கப்படும் பொருத்தமான மரியாதையாகவும் இது அமையும். ஏனெனில், முற்றிலும் புதிய தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சிறப்பாக எதிர்கொள்ள வேண்டுமானால், ‘விக்சித் பாரத்’ என்ற கனவு நனவாகியிருக்கும் சூழலில்தான் அது சாத்தியமாகும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




