சீர்காழி கழுமலையாறு துார்வாரும் பணியின் போது இரு தரப்பினரிடையே பிரச்சணை ஏற்பட்டது. இது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை, சீர்காழி நகரின் வழியே பிரதான பாசன ஆறான கழுமலையாறு உள்ளது. இவற்றின் மூலம் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதனையடுத்து வாய்க்கால் துார்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது கிழக்கு பகுதி துார்வாரும் பணி நடைபெறுகிறது. அப்போது விவசாயிகள் சங்கம் துார்வாரும் பணியின் போது குடியிருப்புகள், அரசு மருத்துவமனை மற்றும் வர்த்தக கட்டங்களிலிருந்து கழிவுநீர் விடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது புழுகாப்பேட்டை பகுதியில் துார்வாரிய மண்ணை குடியிருப்பு பகுதியில் கொட்டியதாகவும், மதிற்சுவரை உடைத்ததாகவும் புகார் தெரிவித்து குடியிருப்பு வாசிகள் துார்வாரும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, இரு தரப்பினரும், சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்புடன் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் நகர் பகுதியில் உடனடியாக பார்வையிட்டு அளவீடு செய்து வாய்க்கால் கரை இடத்தினை உறுதி செய்வது, வாய்க்காலின் இருபுறமும் குடியிருப்புகள், வர்த்தக கட்டங்களிலிருந்து விடப்படும் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து கொள்ளிடம் முக்கூட்டுப் பகுதியில் கழுமலையாறு கழிவுநீர் கலக்கும் பகுதியை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இரு தரப்பினரும் பார்வையிட்டனர்.
அனகா காளமேகன்







