நடிகர் ரஜினிகாந்த் தனது இடையறாத படப்பிடிப்பு பணிகளுக்கு இடையே இலங்கைக்கு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ’ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிவரும் லால்சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினியின் சிறப்பு காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து டி.ஜே.ஞானவேல் இயக்கும் “தலைவர் 170” படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். மேலும் லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் “தலைவர் 171” படத்திலும் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.
https://twitter.com/flysrilankan/status/1679804858390687744?s=46
இடையறாத படப்பிடிப்பு பணிகளுக்கு இடையே சிறு இடைவெளி கிடைக்கவே, சட்டென இலங்கைக்கு கிளம்பியிருக்கிறார் ரஜினிகாந்த். இதனை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், “தமிழ் சினிமாவின் முத்திரை நடிகர் ரஜினிகாந்த், இன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சென்னையிலிருந்து மாலே வரை பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணம் ஒரு நினைவை உருவாக்கியுள்ளது.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது இலங்கை பயணம், அடுத்த படத்திற்கான அப்டேட்டா என சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.







