திருச்சி போலீஸ் ஐ.ஜி பாலகிருஷ்ணன் எழுதிய டைரி குறிப்பு தற்போது இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
காவலர்கள் உயிரிழப்பு என்பது சமீபகாலமாக அதிகரிக்கபட்டு வந்த சூழலில் தமிழ்நாடு அரசு வார விடுமுறை மற்றும் யோகா, தியானம் என மன அழுத்தத்தை குறைக்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. காவல் பணி மற்ற பணிகளை காட்டிலும் சற்று மன அழுத்தமான பணியே, பல காவலர்கள் சிரித்த முகத்தை பார்ப்பதே அரிது.
பொதுவாக காவலர்கள் விளையாட்டு வீரர்களாக இருப்பதை கேள்விபட்டிருப்போம் ஆனால் இலக்கியம், எழுத்து, ஓவியம் என வெகு சிலரே இத்துறையில் பணி நேரம் தவிர்த்து அதில் தங்களை ஈடுபடுத்தியும் வருகின்றனர். அந்த வகையில் திருச்சி போலீஸ் ஐ.ஜி பாலகிருஷ்ணன் தனது டைரியில் கவிதை நடையிலான அன்றைய பொழுதை வரிகளாக வடித்துள்ளார்.
அதில் சில வரிகள்,
‘மேல் படிவமாக இருந்த கருப்பு மண்ணைப் பார்க்கும் போது…
குழந்தை பருவத்தில் விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் போது…
காலில் அடிப்பட்டு ரத்தம் வரும்போதெல்லாம், ரத்தம் நின்று காயம் ஆற…
கையில் பலமுறை ஊதி ஊதி சலித்த மண்ணால் காயத்தை அடைப்பதும்,
அதில் மீதி மண்ணை வாயில் போட்டு களைப்பை போக்குவதும்;
அறியாமையாக இருந்தாலும், அறியாமை கூட பலநேரம் அமைதியையும் ஆனந்தத்தையும் தருகிறது.
காவல் அதிகாரி தனது பணிசுமைக்கு மத்தியிலும் பேஸ்புக்கில் அவர் பகிர்ந்திட்ட இந்த பதிவு மற்ற காவலர்களும் பணி, பணி என்றில்லாமல் மன அழுத்தத்தை இது போன்ற விதத்தில் குறைத்து கொள்ளலாம் என்பது போல் உள்ளது. இருந்தாலும் கவிஞர் பாலகிருஷ்ணன் எழுத்துப்பிழைகளை சரிசெய்திருக்கலாம் எனவும் செல்லமாக கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
– எழுத்து மா.நிருபன் சக்கரவர்த்தி








