தமிழ்நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை – அமைச்சர்

தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கான நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. டெல்லி முதலமைச்சர் அரவிந்த்…

தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கான நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நிலக்கரி பற்றாக்குறையை உடனடியாக தீர்க்காவிட்டால் டெல்லி இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இப்பிரச்னை தீவிரமாக மேலெழுந்ததையடுத்து நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக தேவையற்ற பீதி உருவாக்கப்படுகிறது என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கான நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தலைமைச்செயலகத்தில் பேட்டியளித்த அவர், “நிலக்கரி சுரங்கங்களை ஒட்டிய மாநிலங்கள் என்ற அடிப்படையில் நமது மாநிலத்திற்கு 6 நாட்களுக்கு நிலக்கரியை இருப்பு வைத்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது.

தற்போது 4 நாட்களுக்கான கையிருப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவை, தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி வரவு வருகிறது.

4 நாட்களுக்கான கையிருப்பாக 2.40 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பாக உள்ளது.

தமிழகத்தின் மொத்த மின் தேவையில் 41% அனல்மின் நிலையங்களில் இருந்து கிடைக்கிறது. தனியார் அனல் மின் நிலையங்களிலிருந்து 2,830 மெகாவாட் பெறப்பட்டு வந்த நிலையில், நிலக்கரி விலை உயர்வு, மழைக்கால நிலக்கரி வரத்து குறைவு போன்ற காரணங்களால் 1,300 மெகாவாட்தான் அரசுக்கு தனியார் அனல் மின் உற்பத்தியாளர்கள் வழங்குகின்றனர்.

பற்றாக்குறையான 1,500 மெகா.வாட் மின்சாரத்தை ஈடுசெய்ய தமிழக அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படுகிறது.

நமது அனல்மின் நிலையங்களில் 80% உள்நாட்டு நிலக்கரியையும் , 20% வெளிநாட்டு நிலக்கரியையும் கலந்து எரியூட்டப்படுவதால், நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு வாய்ப்பே இல்லை.

மத்திய தொகுப்பில் இருந்து நாள்தோறும் 3,500 முதல் 4,000 மெகா வாட் பெறப்பட்டு வருகிறது.” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.