பழங்குடியின மக்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்தி நாட்டிலேயே முதல் மாவட்டம் என்ற சிறப்போடு, இந்தியாவுக்கே முன் மாதிரி மாவட்டம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது நீலகிரி.
கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க, தடுப்பூசி ஒன்றே வழி என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தகுதி வாய்ந்த 21 ஆயிரத்து 800 பழங்குடியினர் அனைவருக்கும், ஜூன் 29-ந் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது நீலகிரி மாவட்டம்.
நீலகிரி மாவட்டத்தில் 427 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் தோடர், கோத்தர், குறும்பர், பனியர், இருளர், காட்டுநாயக்கர் ஆகியோர் தொற்றால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இனமாக இந்திய அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பழங்குடியின மக்களை பாதுகாக்கும் பொருட்டு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
இதன் மூலம் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி நாட்டிலேயே முன் மாதிரி மாவட்டம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது நீலகிரி. இதற்காக, சென்னையில் நடைபெற்ற தேசிய மருத்துவர்கள் தின கொண்டாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சிறப்பு விருது பெற்றார் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.
வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், களப்பணியாளர்கள், அரசுசாரா அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் இரவு, பகலாக உழைத்ததன் மூலம் இந்த சாதனை சாத்தியமானது என்றால் மிகையல்ல.







