தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிசிச்சையளிக்க மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு குழந்தைக்கு மருத்துவமனை தூய்மை பணியாளர் ஒருவர் குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் ஒரு படுக்கையில் இரண்டு குழந்தைகளை படுக்க வைத்து சிகிச்சை பெற்று வருவதும், ஏராளமான குழந்தைகள் தரையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது போன்றும் வீடியோவில் பதிவாகி இருந்தது. வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், போதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜெஸ்லீன் உடன் நமது நியூஸ்7 தமிழ் செய்தியாளர் ராஜன் நடத்திய உரையாடலில், மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் தற்போது, தென்காசி மாவட்டத்தில் ஏராளமான குழந்தைகள் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் 40 படுகைகள் மட்டும் இருக்கும் சூழலில், 85-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஒரு படுக்கையில் 2 குழந்தைகளை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது.
அதேபோல் மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளதால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க முடியவில்லை. பணியாளர்கள் பற்றாக்குறை சரி செய்து கொடுக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் என தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளராக உள்ள ஜெஸ்லீன் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா









