கூடலூரில் 3 வருடங்களாக காயத்துடன் அலைந்த யானைக்கு சிகிச்சை!

கூடலூர் பகுதியில் மூன்று வருடங்களாக காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை, கும்கி யானை மூலம் மயக்க ஊசி இன்றி பிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வால் பகுதியில் பலத்த காயம்…

கூடலூர் பகுதியில் மூன்று வருடங்களாக காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை, கும்கி யானை மூலம் மயக்க ஊசி இன்றி பிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட காட்டு யானை ஒன்று அந்தப் பகுதியில் சுற்றி வந்தது. பெரும் அவதிக்குள்ளான இந்த யானை, தோட்டம்மூலா, அல்லூர்வயல், சில்வர்கிளவுட் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை நாசம் செய்து வந்தது.

கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் மற்றும் மாவட்ட வன அதிகாரி கொம்மு ஓம்கார், தலைமை மருத்துவர் சுகுமாரன், முதுமலை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் அந்த யானையை இன்று பிடித்தனர். கும்கி யானைகள், விஜய், சுமங்கலா உதவியுடன் மயக்க ஊசி இல்லாமல் அந்த யானைக்கு முதலுதவி அளித்தனர்.

யானையை, முதுமலை அபயாரணம் பகுதியில் கரோல் அமைக்கபட்ட இடத்திற்கு கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வருவதால் யானையை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த யானையை கொண்டு செல்வதற்காக, உதயா, ஜம்பு, வசீம் ஆகிய யானைகள் வரவழைக்கபட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்போது இந்த யானைக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது தேவையான மருந்துகளையும் வழங்க மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதனிடையே இந்த யானையை பராமரிப்பதற்காக நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியிலிருந்து குழு ஒன்று வந்துள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.