ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப் பயணத்தை துவங்கி தொண்டர்களை சந்திப்பேன் என சசிகலா கூறியுள்ளார்.
சிறையிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியே வந்த சசிகலா, அதன்பிறகு அமைதியாக இருந்து வந்தார். மார்ச் 3ஆம் தேதி அறிக்கை வெளியிட்டவர், அரசியலில் இருந்து தான் ஒதுங்கியிருப்பதாகவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன் என்றும் குறிப்பிட்டார்.
எனினும் சட்டமன்றத் தேர்தலில் 66 இடங்களைப் பெற்ற அதிமுக ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. இதனிடையே அண்மைக் காலமாக சசிகலா தொண்டர்களும் பேசும் ஆடியோ தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதில், தான் மீண்டும் அரசியலுக்கு வருவதாக பேசிவருகிறார்.
இந்த நிலையில் மானாமதுரை அதிமுக நிர்வாகி சண்முகப்பிரியாவுடன் சசிகலா தொலைபேசியில் உரையாடும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப் பயணத்தை துவங்கி தொண்டர்களை சந்திப்பேன் என்று கூறும் சசிகலா, தொண்டர்களை கண்கலங்க விட மாட்டேன் எனவும், நியாயமாகவும், நல்ல விதமாகவும் கட்சியை கொண்டு செல்லும் கட்டாயத்தில் இருக்கிறோம், கண்டிப்பாக செயல்படுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.







