தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு துறைகளுக்கான செயலாளர்கள் மாற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த மே 16 ஆம் தேதி, 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 48 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
மீண்டும் அதிக எண்ணிக்கையிலான ஐபிஎஸ் அதிகாரிகளை ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும், பணியிட மாற்ற பட்டியல் தயாராகி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் நியூஸ்7 தமிழ் முன்னதாக தெரிவித்திருந்தது. இதனை அடுத்து, கடந்த மே 19 ஆம் தேதி, 27 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து மே 22 ஆம் தேதி, 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆணையில், தமிழ்நாட்டில் புதிதாக இயற்கை வளங்களுக்கென்று தனியாக துறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இயற்கை வளங்கள் துறையை, கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க பதிவாளராக இருந்த சண்முகசுந்தரம் ஐஏஎஸ், போக்குவரத்து துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை ஆணையராக இருந்த நிர்மல்ராஜ், மண்ணியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த துறையின் ஆணையராக பதவி வகித்த ஜெயகாந்தன், சமூக நலத்துறை மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : விஜய்யின் 68-வது திரைப்படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?
சமூக நலத்துறை இயக்குனராக இருந்த டி.ரத்னா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் செயல் இயக்குநராக சிம்ரன்ஜீத் சிங் கலோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் மதுரை மாநகராட்சி ஆணையராக பிரவீன்குமாரும், சேலம் மாநகராட்சி ஆணையராக எஸ்.பாலச்சந்தரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







