நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஒரு நல்ல முன்னெடுப்பாக பல கல்லூரிகளை
ஒன்றிணைத்து கல்வி கண்காட்சியை நடத்தி வருகிறது என விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தெரிவித்துள்ளார்.
நியூஸ்7 தமிழ் சார்பில் உயர்கல்வி பயில இருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும்
விதமாக கல்வி கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, கோவை, மதுரை உள்ளிட்ட
மாவட்டங்களில் நடைபெற்ற கல்வி கண்காட்சிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை
தொடர்ந்து, தலைநகர் சென்னையிலும் சேலம் மாவட்டத்திலும் நேற்றும் இன்றும்
நியூஸ்7 தமிழ் சார்பில் கல்வி கண்காட்சி நடைபெறுகிறது.
சென்னையில் காமராஜர் அரங்கத்தில் நேற்று காலை 10 மணிக்கு சென்னை
மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற
உறுப்பினர் மயிலை வேலு உள்ளிட்டோர் நியூஸ் 7 தமிழ் நடத்தும் கல்வி கண்காட்சியை
தொடங்கி வைத்தனர்.
நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை கல்வி கண்காட்சி நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் நேரில் வந்து பார்வையிட்டு தங்கள் சந்தேகங்களுக்கு கேட்டு தெரிந்து கொண்டனர்.
இன்று இரண்டாவது நாளாக கல்வி கண்காட்சி நடைபெற்று வருகிறது. காலை முதலே
மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுடன் கல்வி கண்காட்சியில் இடம்
பெற்றுள்ள பிரபல கல்வி நிறுவனங்களின் அரங்குகளை நேரில் பார்வையிட்டு
வருகின்றனர்.
இந்த கல்வி கண்காட்சி உயர் கல்வி படிக்க இருக்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் அமைந்திருப்பதாக பெற்றோர்களும் மாணவர்களும் தெரிவித்து வருகின்றனர் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கல்வி கண்காட்சியை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா கல்வி கண்காட்சியில் கலந்து கொண்டு அனைத்து கல்வி அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர் பேசிய அவர் தெரிவித்தாவது..
12 ஆம் வகுப்பு படித்த முடித்தவுடன் வேண்டும், என்ன படிக்க வேண்டும் , எதை
படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கும். என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை எப்படி செய்ய வேண்டும் என்ற
குழப்பம் இருக்கும்.
தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்காக நான் முதல்வன் என்ற திட்டம் கூட
அறிவிக்கப்பட்டு இருக்கிறது அரசாங்கம் மட்டுமே மக்களுக்காக அனைத்தையும் செய்து
விட முடியாது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஒரு நல்ல முன்னெடுப்பாக பல கல்லூரிகளை ஒன்றிணைத்து இன்று இந்த கல்வி கண்காட்சியை நடத்தி வருகிறது.
இரண்டு நாட்களாக சிறப்பாக மாணவர்கள் மத்தியில் என்னென்ன துறைகள் உள்ளன என்பதை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்வி கண்காட்சி நடைபெற்று
வருகிறது. நானும் அனைத்து கல்வி அரங்குகளிலும் என்னென்ன துறைகள் உள்ளன என்பது குறித்து விசாரித்துள்ளேன். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் மாணவர்களுக்கு எடுத்துரைக்க உதவும் என்று நினைக்கிறேன்.
எனது தொகுதியை சார்ந்த மாணவர்களும் இங்கு வந்து பயன்பெற இது உதவியாக இருக்கும். கல்வி கடன் எங்கு வாங்க வேண்டும் எப்படி வாங்குவது அதற்கு வழி இருக்கிறதா என்பது தெரியாமல் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் கல்வி கடன் குறித்து விளக்கும் வகையில் வங்கி அரங்குகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
அரசு மட்டும் நினைத்தால் அனைத்தும் செய்துவிட முடியாது நியூஸ்7 தமிழ்
தொலைக்காட்சி இது போன்ற ஒரு நல்ல முன்னெடுப்பை எடுத்ததற்கு தொகுதியின் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.







