கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம் – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

கனடா உடனான வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகிறோம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தகம் மற்றும் இறக்குமதி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனிடையே அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கும் வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். மேலும் கனடவை அமெரிக்காவின் மற்றொரு மாகாணம் என்று அதிபர் டிரம்ப் கூறியதால் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் மீது கனடா கூடுதல் வரியை விதித்தது.

இதற்கு பதிலடியாக அதிபர் டிரம்ப், கனடாவின் செயல் அப்பட்டமான விதி மீறல் என்றும் அந்த நாட்டுடனான வர்த்தக பேச்சுவார்த்தை உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். இதை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

“பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை கனடா வரி விதித்து வருகிறது. வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கடினமான நாடான கனடா, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது. இது நமது நாட்டின் மீது நேரடியான மற்றும் வெளிப்படையான தாக்குதலாகும். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை நகலெடுக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

ஐரோப்பிய ஒன்றியமும் இதே காரியத்தைச் செய்துள்ளது. தற்போது எங்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளது. இந்த மோசமான வரியின் அடிப்படையில் கனடா உடனான வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகிறோம். அமெரிக்காவுடன் வணிகம் செய்ய அவர்கள் செலுத்த வேண்டிய வரியை அடுத்த 7 நாட்களுக்குள் கனடாவுக்குத் தெரிவிப்போம்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.