தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறை சார்பில் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டு நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வெளிச்சந்தைகளில் சதமடித்த தக்காளியின் விலையால் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, ஒரே நாளில் 20 ரூபாய் உயர்ந்து, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை கடைகளில் உயர் ரக தக்காளி கிலோ 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது.
வெயிலின் தாக்கம் காரணமாக வரத்து குறைவு ஏற்பட்டு, தக்காளி விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் விளைச்சல் குறைவால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும் 800 டன் ஆக இருந்த தக்காளி வரத்து, 300 டன் ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன், சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் பதிவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் தற்காலிகமான இந்த விலை உயர்வை பயன்படுத்தி, தக்காளியை பதுக்கி வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : ”லியோ படம், ஒரு விழிப்புணர்வு கதையாகக்கூட இருக்கலாம்” – எம்.பி விஜய் வசந்த்
அதேபோல், கூட்டுறவுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் கூட்டுறவுத்துறை சார்பில் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.







