தூத்துக்குடி குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று, குரங்கணி
முத்துமாலை அம்மன் கோயில். இந்த கோயிலில் ஆனி பெருந்திருவிழா மிகவும்
பிரசித்தி பெற்றதாகும். இந்த குரங்கணி, ராமபிரான் ராவணனை போர்புரிந்து
வெல்ல காரணமான இடமாக கூறப்படுகிறது. வானர சேனையை அணிவகுத்து நின்ற
இடமாக, அதாவது குரங்கு அணிவகுத்து நின்ற இடம் குரங்கணி என்று கூறப்படுகிறது.
இந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனை வழிபட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். மேலும், இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து கோயில் முன்பு கால்நாட்டு விழா நடந்தது. இதற்காக காலுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடந்து கால் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழா 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வு ஜூலை 11ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம்
பக்தர்கள் மாவிளக்கு வைத்தல், மரக்கட்டைகளால் செய்யப்பட்ட கை, கால்கள்
ஆகியவைகளை நேர்த்தி கடனாக செலுத்துவார்கள். இந்த திருவிழாவில் கலந்து கொள்ள சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கு. பாலமுருகன்







