டோக்கியா ஒலிம்பிக் நடக்கும் பகுதியில் உள்ள ஒலிம்பிக் தடகள கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பல்வேறு நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுமா என்று பல்வேறு குழப்பங்கள் நீடித்தன.
எனினும் ஜப்பான் அரசு இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் உறுதியாக இருந்தது. இதையடுத்து டோக்கியோவில் வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுடனும், பார்வையாளர்கள் அனுமதி இல்லாமலும் ஒலிம்பிக் போட்டிகள் ந டைபெற உள்ளன.
இதையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து தடகள வீர ர்கள், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் டோக்கியோவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தலைமை செயல் அதிகாரி டோசிரோ முடோ, ”ஒலிம்பிக் போட்டிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
கொரோனா தொற்றுக்கு ஆளானவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்றோ, அவர் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட ஒலிம்பிக் நிர்வாகம் மறுத்து விட்டது.
ஜப்பானில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அந்த நாட்டின் மருத்துவ சுகாதாரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வரும் வீர ர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களால் கொரோனா தொற்று அதிகமாக பரவும் என்று ஜப்பான் மக்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக்கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.








