இரங்கல் தீர்மானத்துடன் இன்றைய சட்டப்பேரவை கூட்டம் நிறைவு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியதும், மறைந்த பிரபலங்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நாளைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.    தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.…

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியதும், மறைந்த பிரபலங்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நாளைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

 

தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. பின்னர் 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் இன்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கூட்டரங்களில் இன்று காலை 10 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கியது.

 

கூட்டம் தொடங்கியதும், எலிசபெத் ராணி, அஞ்சலை பொன்னுசாமி, முலாயம் சிங் யாதவ், கொடியேறி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடபட்டி முத்தையா, பாளையங்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ தர்மலிங்கம், வால்பாறை முன்னாள் உறுப்பினர் கோவை தங்கம், திருவண்ணாமலை கலசபாக்கம் முன்னாள் உறுப்பினர் திருவேங்கடம், ஹக்கீம் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.


கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் அமர்ந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்தனர். ஆனால், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கலந்து கொள்ளவில்லை. இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு பேரவை கூட்டத்தை நாளைய தினம் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

 

இதையடுத்து, சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். நாளை மற்றும் நாளை மறுநாள் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் அருணா ஜெகதீசன் ஆணையம், மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி தூடு தொடர்பான அறிக்கை நாளைய தினம் சமர்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவருக்கு எந்த இருக்கை ஒதுக்குவது என பேரவை தலைவர் அறிவித்த பின்னரே கூட்டத்தில் பங்கேற்கவா? அல்லது புறக்கணிப்பதா என எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு எடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.