MBBS படிப்புகளுக்கான கலந்தாய்வு 19ஆம் தேதி தொடங்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இளநிலை மருத்துவ (MBBS) படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 19ஆம் தேதி தொடங்க உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை…

இளநிலை மருத்துவ (MBBS) படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 19ஆம் தேதி தொடங்க உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்தவ கல்வி இயக்குநரகம் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”2022-23 ம் ஆண்டிற்கான மருத்துவம் , பல் மருத்துவ படிப்பிற்கு அரசு, சுயநிதி மருத்துவ இடங்கள், நிர்வாக மருத்துவ இடங்களுக்காக மொத்தம் 22,736 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 2695, விளையாட்டு பிரிவில் 216, முன்னாள் படைவீரர் பிரிவில் 356 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேலும் 7.5% ஒதுக்கீட்டில் சுயநிதி கல்லூரி இடங்கள் எம்.பி.பி.எஸ் 454 இடங்கள், பி.டி.எஸ் கல்லூரியில் 104 இடங்கள் என மொத்தம் 558 இடங்கள் உள்ளன.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்றே விளையாட்டு, முன்னாள் படை வீரர் , மாற்றுத்திறனாளி பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று, மாலை சேர்க்கை அனுமதியும் வழங்கப்படும். அக்டோபர் 20 ஆம் தேதி அரசு சுயநிதி கல்லூரிகளில்,  7.5% இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்று மாலை 454 எம்.பி.பி.எஸ் மற்றும் 104 பி.டி.எஸ் என 558 இடங்களுக்கான சேர்க்கை அனுமதியும் வழங்கப்படும்.

மேலும், 25 ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான இணைய வழி கலந்தாய்வும்,  21 முதல் 27ஆம் தேதி வரை சுய நிதி ஒதுக்கீட்டிற்கான இணைய வழி கலந்தாய்வும், 27, 28 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் நடைபெறும். மேலும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர்களுக்கு நவம்பர் 15 ஆம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்க உள்ளது.

7.5 % உள் ஒதுக்கீட்டில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தேவதர்ஷினி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று 518 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். மேலும், 7.5 % இட ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு துறையின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 7.5 % இட ஒதுக்கீட்டில் 558 ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பை படிக்க உள்ளனர். இவர்களுக்கு மருத்துவம் சார்ந்த பாடங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணிணிகள், கடந்த ஆண்டைப் போலவே அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.