மதுரை கள்ளழகர் கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா!

மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா துவக்க நிகழச்சியாக  முகூர்த்தக்கால் நடும் கொட்டகை முகூர்த்த விழா விமர்சையாக இன்று நடைபெற்றது. 108 வைணவ தலங்களில் ஒன்றும், ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கள்ளழகர்…

மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா துவக்க நிகழச்சியாக  முகூர்த்தக்கால் நடும் கொட்டகை முகூர்த்த விழா விமர்சையாக இன்று நடைபெற்றது.

108 வைணவ தலங்களில் ஒன்றும், ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இதில் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்புவாய்ந்தது. இந்தாண்டுக்கான விழா வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளதால் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தக்கால் நடும் கொட்டகை முகூர்த்த விழா கள்ளழகர் திருக்கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆயிரம்பொன் சப்பரத்தில் பொருத்தப்படும் யாழி முகத்திற்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதற்காக அழகர்கோயிலில் உள்ள நுாபுரகங்கையில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு மேளதாளங்கள் முழங்க முகூர்த்தகால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நுழைவு வாயிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. கள்ளழகர் மதுரை வரும் போது அவர் எழுந்தருளும்  அனைத்து மண்டகப்படிகளிலும் இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இதனையடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வரும் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 30-ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிசேகமும், 2-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 3-ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

—-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.