புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவடைந்ததை அடுத்து, கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேலும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு…

புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை முடிவடைந்ததை அடுத்து, கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேலும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இந்த வாரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்தது.

தொடர்ந்து மழை பொழிவதை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வடக்கு அந்தமான் கடற்பகுதியின் மேல் நாளை புதிய மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் தாக்கத்தால் மத்திய வங்கக்கடலில், வரும் 22 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பிறகு வடமேற்கு நோக்கி நகர்ந்து, மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்து வருவதால், புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.