மதிமுகவை காப்பாற்ற இப்போதே திமுகவில் இணைக்க வேண்டும் என்று மதிமுக அவைத் தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
மதிமுகவை அதன் தாய்க் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று, அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி, வைகோவிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் துரைசாமி அனுப்பிய கடிதத்தை தாம் நிராகரிப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக அவைத் தலைவர் துரைசாமி கூறியதாவது:
தொழிற்சங்க சொத்துக்கள் சங்கத்திற்குட்பட்டது. நான் உட்பட யாரும் அதனை அபகரிக்க முடியாது. தனிப்பட்ட துரைசாமி பெயரில் எதுவும் வாங்கவில்லை. ஆனால் வைகோ பெயரில் தாயகம் வாங்கியதை சுட்டிக்காட்டியுள்ளேன். வங்கி கணக்கு உட்பட எதுவும் தனியாக துவங்கப்படவில்லை. கட்சியின் பொருளாளர் தான் வரவு செலவுகளை கண்காணிக்க வேண்டும். ஆனால் தற்போது பொருளாளரால் அதனை கண்காணிக்க முடிவதில்லை.
இதையும் படியுங்கள் : BTS : சோதனைகளை சாதனைகளாக்கிய இளைஞர் படை…..
நான் தான் திமுகவில் இணைத்துவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். மதிமுகவில் உட்கட்சி தேர்தல் எல்லாம் பினாமி தேர்தல். மாற்றுக்கட்சியில் சேருவது குறித்து முடிவெடுக்கவில்லை. ஆனால் தற்போதுள்ள சூழலில் திமுகவை ஆதரிக்கிறேன். மதிமுகவில் முன்னணி தலைவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை. இப்போதே காப்பாற்ற திமுகவில் இணைத்துவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.








