எப்படி கிடைத்தது 8 மணி நேர வேலை?

மே தினம் (அ) தொழிலாளர் தினம் (அ) சர்வதேச தொழிலாளர் தினம் என்பது ஒவ்வொரு வருடமும் மே 1ம் தேதி அன்று உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவம் அதன் ஆணிவேரான 8…

மே தினம் (அ) தொழிலாளர் தினம் (அ) சர்வதேச தொழிலாளர் தினம் என்பது ஒவ்வொரு வருடமும் மே 1ம் தேதி அன்று உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவம் அதன் ஆணிவேரான 8 மணிநேர வேலை நாள் இயக்கத்தில் தான் தொடங்குகிறது. 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் உலகளவில் நடந்த மாபெரும் புரட்சிகளும், பல புரட்சியாளர்களின் தியாகங்களுமே இதற்கு சான்றாகும். இந்த சக்திவாய்ந்த புரட்சியின் ஆரம்ப புள்ளிகளை, அதன் வரலாற்றுச் சிறப்புகளை இக்கட்டுரையில் காண்போம்….

தொழிலாளர் தினத்தின் கருவான 8 மணி நேர வேலை இயக்கத்தின் தொடக்க புள்ளியாக இருந்தவர் ராபர்ட் ஓவன் (1771-1858). பிரிட்டனின் வேல்ஸ் நாட்டை சேர்ந்த மில் உரிமையாளரான இவர், லட்சியவாத சோஷலிசத்தை (Utopian Socialism) தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும் உள்ளார். சமூக சீர்திருத்தாதியான இவர், ‘பிரிட்டனின் சோஷலிசத் தந்தை’ எனவும் அழைக்கப்படுகிறார்.

தன் சிறு வயது முதலே ஏழைகள், தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டிருந்த ராபர்ட் ஓவன், ஆலை நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். 1810ல் முதன் முதலில் 10 மணி நேர வேலை நேரத்திற்கான கோரிக்கையை எழுப்பியதோடு, அக்கொள்கையை நியூலானார்க்கில் உள்ள தனது “சோசலிச” நிறுவனத்தில் நடைமுறைப்படுத்தினார். 1817ல் 8 மணி நேர வேலை நாளின் இலக்கை வகுத்த ஓவன், “8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு” என்னும் முழக்கத்தையும் உருவாக்கினார். குழந்தை தொழிலாளர்கள் நிலையை மேம்படுத்தியதிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு!

ராபர்ட் ஓவனுக்கு முன்பாகவே, 1594ம் ஆண்டில், ஸ்பெயினின் இரண்டாம் பிலிப் அரசர் (1527-1598), ‘ஓர்டனான்சாஸ் டி ஃபெலிப் II’ என அழைக்கப்படும் அரச ஆணையின் 6வது சட்டத்தின் மூலம் 8 மணி நேர வேலை திட்டத்தை அமல்படுத்தியாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்ததாக 1830களில் பிரான்ஸ் நாட்டின் நெசவுத் தொழிலாளர்கள் 15 மணி வேலை நேரத்தை எதிர்த்து, பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1834ல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து, இவர்கள் நடத்திய பெரும் கிளர்ச்சியும் தோல்வியிலேயே முடிவடைந்தது.

8 மணி நேர வேலை நாள் கோரிக்கையை உலகிலேயே முதன் முதலில் அமல்படுத்தியது ஆஸ்திரேலிய நாடு தான். மெல்போர்னின் கட்டிடத் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து நடத்திய பல போராட்டங்களுக்குப் பிறகு, 1856ம் ஆண்டு வெற்றியும் பெற்றனர். இந்த வெற்றியானது தொழிலாளர்கள் வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

தொழிலாளர் தினம் உருவாக முக்கிய காரணமாக இருந்த ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு’, 1 மே 1886 முதல் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வைத்தது. 3 மே 1886ல் ‘மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்’ வாயிலில் நடந்த தொழிலாளர்கள் போராட்டம் கலவரமாக வெடித்ததில் 4 தொழிலாளர்கள் இறந்தனர். அதற்கு கண்டனம் தெரிவித்தும், 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்தும் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் அமைதியாக நடந்துக்கொண்டிருந்த பொது கூட்டத்தில், திடீரென்று வெடிகுண்டு வீசப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திலேயே ஒரு காவலர் பலியானார். பின்னர் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கியதோடு, முக்கிய தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில் 4 பேருக்கு நவம்பர் 1886ல் தூக்கு தண்டனையும் நிறைவேற்றபட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுவதோடு, ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னமும் உருவாக்கப்பட்டுள்ளது.

1889ம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில், 1 மே 1890 முதல் நாள் 8 மணி நேர நேர வேலையை கோரிக்கைக்கான இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் உலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் எனவும் அறைகூவல் விடப்பட்டது. இதுவே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக (அ) மே தினமாக கொண்டாட வழிவகுத்தது.

இந்தியாவில் முதன் முதலாக 1 மே 1923ல், சமூக சீர்திருத்தவாதி ம. சிங்காரவேல் தலைமையில் சென்னை மெரீனா கடற்கரையில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. அதே நாளில், வடசென்னை தொழிலாளர்கள் சார்பாக பெரும் ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது. இந்த இரண்டு கூட்டங்களிலும் தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்று மே தினத்தை கொண்டாடினர்.

சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் வகையிலான தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் எழுந்த கடும் கண்டனங்களுக்கு பின்னர், அம்மசோதாவை அரசு திரும்பப் பெறுவதாக மே தினமான இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.