பொன்னமராவதியில் அமைந்துள்ள பட்டமரத்தான் கோயிலின் மூன்றாம் நாள் திருவிழாவையொட்டி, பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், ஊரின் மையத்தில் காவல் தெய்வமாக மக்களை காத்து வரும் பட்டமரத்தான் கோயில் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக விளங்கி வருகிறது. பல்வேறு நன்மைகள் அளித்து வரும் பட்டமரத்தான் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும் நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையின் சார்பாக பால்குடம் பூத்தட்டு எடுத்துச் சென்று பட்டமரத்தான் சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
மேலும்,ஆண்டுதோறும் மூன்றாம் நாள் பூச்சொரிதல் திருவிழா காவல்துறையின் சார்பாக நடைபெறும். அதேபோன்று இந்த ஆண்டு காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையில் நடைபெற்ற பூச்சொரிதல் திருவிழாவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்கள் பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க பூத்தட்டு, பால்குடம் எடுத்துச் சென்று பட்டமரத்தான் சுவாமியை வழிபட்டனர்.
பின்னா், பட்டமரத்தான் சுவாமிக்கு திருமஞ்சனம், விபூதி, சந்தனம் ,பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக ஆராதனை செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வடை மாலை சாத்தி வழிபட்டனர். இவ்விழாவையொட்டி பொன்னமராவதி காவல் நிலையம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. மேலும் காவல் நிலையத்தில் பணி புரியும் சக காவலர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
— ரூபி.காமராஜ்







