மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டும் நடவடிக்கையை கர்நாடக அரசு நிறுத்த வேண்டும் என, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக தீர்மானத்தை வாசித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நமக்குள் ஆயிரம் இருக்கலாம்; காவிரி பிரச்சினையில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பேசுவதை விட்டு விட வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். என்று தொடங்கி, கனத்த இதயத்தோடு ஒரு தீர்மானத்தை உங்கள் முன் படிக்கிறேன்; நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லதாகவே இருக்கட்டும் என்று பேசி தீர்மானத்தை வாசித்தார்.
இந்த தீர்மானம் தொடர்பாக நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறிய நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மேகதாது அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி கர்நாடக அரசு பணிகளைத் தொடங்கிவிட்ட பிறகு, தாமதமாக தூக்கம் கலைந்து விழித்துள்ள திமுக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ஆனால், கடிதம் எழுதுவது, தீர்மானம் நிறைவேற்றுவது என்கிற கருணாநிதி காலத்து நடைமுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனை திமுக வழக்கப்படி இம்முறையும் விட்டுக் கொடுத்துவிடக்கூடாது. நாடாளுமன்றத்தில் அதிக எம்பிக்களை வைத்திருக்கிறதோடு தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தையும் வைத்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.