அரசு பள்ளி மாணவி தமிழக அளவில் பொறியியல் கலந்தாய்வில் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள தேவநாத சுவாமி நகர் ஜி .ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்த பிருந்தா என்ற அரசு பள்ளி மாணவி, வளவனூரில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதியதில் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 94 மதிப்பெண்களும் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் ஆகிய நான்கு பாடத்திலும்100 மதிப்பெண்கள் என 593 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதில் அரசு பள்ளியில் பயின்ற பிருந்தா என்ற மாணவி 200 க்கு 200 பெற்று அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளில் தமிழகத்திலேயே முதல் இடம்பிடித்துள்ளார். பொது பிரிவில் தரவரிசை பட்டியலில் 35வதுஇடம் பிடித்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவி கூறுகையில்: அரசு பள்ளியில் பயின்று முதல் பிடித்ததில் தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் உண்டு உறைவிடப் பள்ளியில் எந்த அச்சமின்றியும் மாணவர்களை சேர்க்கலாம் என்றும் அதிக மதிப்பெண்கள் பெற தனக்கு அரசுபள்ளி ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தனது தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டாலும் தாய் விஜயலட்சுமி அங்குள்ள பால் சொசைட்டியில் வேலை செய்து படிக்க வைத்ததில் பெருமிதம் கொள்வதாகவும்,. தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தாலும் மருத்துவராக வேண்டும் என்பதே தனது கனவு எனவும் நீட் தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்காக காத்திருப்பதாகவும் மாணவி கூறியுள்ளார்.







