பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைப் போதை பழக்கத்திலிருந்து வெளிகொண்டு வர, பெற்றோர்கள் அவர்களை விளையாட்டுப் போட்டிகளில் உட்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாகப் போதை பழக்கம் உள்ளது. கடந்த 10, 15 ஆண்டுகளாகப் பள்ளிக்கூடங்களில் கூட இந்த போதை பழக்கம் உள்ளதைப் பார்க்கமுடிகிறது. போதைப் பொருட்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரி வாசல்களில் அதிகம் கிடைப்பதற்குக் காரணம், காவல் துறை அவர்களுக்கு உடந்தையாக இருப்பதுதான் எனத் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘விஜயகாந்த் உடல்நலம் குறித்து வதந்திகள்-தேமுதிக கண்டனம்’
தொடர்ந்து பேசிய அவர், போதைப் பொருட்களைப் பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருவதாகவும், 30 சதவிகிதம் பெண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பள்ளிகளில் பாட இடைவெளியின் போது, கழிப்பறைகளில் மாணவர்கள் அதிகமான போதைப் பொருட்களை உபயோகித்து விட்டு வகுப்பறைக்குச் செல்வதாகக் குற்றச்சாட்டு தெரிவித்த அவர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை, பெற்றோர்கள் விளையாட்டுப் போட்டிகளில் உட்படுத்தலாம், அப்போது தான் போதையிலிருந்து வெளிவரக்கூடும் என அவர் கூறினார்.








