புதிய பாரதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த மாபெரும் சுதந்திர போராட்ட வீரரான அல்லுரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்த தினத்தை ஒட்டி, பீமாவரத்தில் அவருக்கு 30 அடி உயரம் கொண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டது.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி சிலையை திறந்து வைத்தார். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஆரம்பத்திலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் அல்லுரி சீதாராம ராஜு என்றும், அதோடு ஆதிவாசிகள் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தன்னை அர்ப்பணித்து, இளம் வயதிலேயே தியாகியாகிவிட்டவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
நாடு தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, அல்லுரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்த தினமும் கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டிய பிரதமர், அல்லுரி சீதாராம ராஜூவின் பிறந்த தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள் கண்ட கனவுக்கு ஏற்ப புதிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய நரேந்திர மோடி, இதை கருத்தில் கொண்டே கடந்த 8 ஆண்டுகளாக தனது அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இதேபோல், அல்லரி சீதாராம ராஜூ அவர்கள் கண்ட கனவை நனவாக்கும் நோக்கில், ஆதிவாசிகளின் நலன்களுக்காக தனது அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
நமது நாட்டின் இளைஞர்கள், பெண்கள், ஆதிவாசிகள் ஆகியோர் நாட்டை வழிநடத்துவதன் மூலம் உருவாகும் புதிய பாரதத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் பிரதர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நிகழ்ச்சி முடிந்ததும் பீமாவரத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் பசல கிருஷ்ண மூர்த்தியின் வீட்டிற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 90 வயதாகும் அவரது மகள் பசல கிருஷ்ண பாரதியிடம் ஆசி பெற்றார்.











