ஐந்து மாபெரும் குறிக்கோள்கள் கொண்ட அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான ஃபெட்னா அமைப்பின் 35வது ஆண்டு விழாவில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அதில் பேசிய அவர், விழாவில் கலந்துகொள்ளலாம் என முதலில் நான் திட்டமிட்டு இருந்தாலும், தமிழ்நாட்டில் பல்வேறு பணிகள் இருந்த காரணத்தால் குறிப்பிட்ட இந்த நாட்களில் வர இயலாத சூழல் இருந்ததாகக் குறிப்பிட்டார். இடப்பெயர்வுகள் காலம்காலமாக நடந்து வருகின்றன. எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. பழம்பெருமை பேசுவது தவறும் இல்லை. நாம் ஏன் பழம்பெருமை பேசுகிறோம் என்றால் பழம்பெருமை நமக்கு இருக்கிறது. அதனால் பேசுகிறோம், நாம் பேசுவது ஏன் சிலருக்குக் கசப்பாக இருக்கிறது என்றால், அவர்களுக்கு எந்தப் பெருமையும் இல்லாமல் இருப்பதுதான் அதற்குக் காரணம் என சுட்டிக்காட்டினார்.
மேலும், கீழடி உள்ளிட்ட ஆய்வுகளின் மூலமாக நமது வரலாற்றை மீட்டெடுப்பது, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை நடைமுறைப்படுத்துவது, உலகளாவிய தமிழினத்தை ஒருங்கிணைப்பது, தமிழன் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவன் கண்ணீரைத் துடைப்பது, தமிழ்நாட்டை அனைத்து மேன்மைகளும் அடைந்த நாடாக வளர்த்தெடுப்பது
ஆகிய ஐந்து மாபெரும் குறிக்கோள்கள் கொண்ட அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கோட்பாட்டின் அரசியல் வடிவமாக அது சொல்லப்படுகிறது. இந்தத் தத்துவத்திற்கு எதிரானவர்கள், இந்தக் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் – எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கக் கூடாது என்று நினைப்பவர்கள், திராவிட இயக்கத்தையும் எதிர்க்கிறார்கள். இந்த ஆட்சியையும் எதிர்க்கிறார்கள். திராவிடம் என்ற சொல்லையும் எதிர்க்கிறார்கள். இத்தகைய எதிரிகள் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறார்கள். இவர்களை மீறித்தான், இவர்களை எல்லாம் தாண்டித்தான் தமிழினம் வளர்ந்திருக்கிறது. வாழ்ந்துகொண்டு இருக்கிறது. எனவே, இவர்களைப் புறந்தள்ளி நாம் வளர்வோம், வாழ்வோம். மத மாய்மாலங்களையும், சாதிச் சழக்குகளையும் வீழ்த்தும் வல்லமை மொழிக்குத்தான் உள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.
-ம.பவித்ரா







