திமுக கொள்கைக்கும், பாஜக கொள்கைக்கும் இடையே எந்த உறவும் இல்லை, திமுக கொள்கைகளை எந்த காலத்திலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாள், மணி விழாவாகச் சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவனைப் பார்த்தால் 60 வயது ஆனவரை போல் தெரியவில்லை. மேடையில் ஏறினால் 20 வயதானவரை போல் சிறுத்தையாகச் சீறுகிறார், புலியாகப் பாய்கிறார் எனக் கூறினார். மேலும், பெரியார், கருணாநிதி தமிழ் மக்களுக்காகத் தமிழ் நாட்டிற்காக 95 வயது வரை வாழ்ந்தார்கள் எனத் தெரிவித்த அவர், அவர்களைப் போல் திருமாவளவனும் தமிழ்நாட்டிற்காக நீண்ட நாள் வாழ்வார், வாழ வேண்டும் எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக மாணவர் அணியில் பணி செய்த காலத்திலிருந்து திருமாவளவன் நான் அறிவேன். எப்போதும் எந்த சூழலிலும், எங்களுள் ஒருவர் திருமாவளவன் எனத் தெரிவித்த முதலமைச்சர் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதைப் போல் எங்களுக்குத் துணையாக இருப்பவர் திருமாவளவன் எனக் கூறினார். மேலும், திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே இருப்பது தேர்தல் அரசியல் கூட்டணி அல்ல கொள்கை கூட்டணி எனக் குறிப்பிட்ட அவர், அதனால், தான் இந்த கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது. ஒரு தாய் பிள்ளையாக உள்ளோம் எனக் கூறினார்.
https://twitter.com/mkstalin/status/1559533646368817152
அண்மைச் செய்தி: ‘இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் ‘முரசொலி மாறன்’’
மேலும், இந்த ஆட்சி இருப்பதே பெரியார், அண்ணா, கருணாநிதி, திராவிட கருத்துகளை நிறைவேற்றத் தான் எனத் தெரிவித்த அவர், டெல்லிக்கு நான் காவடி தூக்கவா போகிறேன்? கை கட்டி வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்? கலைஞர் பையன் நான் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஐக்கியப் படுத்துவோம் என்கிற முழக்கத்தை நானும் வழி மொழிகிறேன் எனக் கூறினார்.
30 ஆண்டுகளுக்கு முன் திருமாவளவனுடன் இந்த அளவு நெருங்கிப் பழகக் கூடிய நிலை ஏற்பட்டிருந்தால், நானே அவருக்குப் பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்திருப்பேன் எனக் குறிப்பிட்ட அவர், திமுக கொள்கைக்கும் பாஜக கொள்கைக்கும் இடையே எந்த உறவும் இல்லை. அதனால், திருமாவளவன் கொஞ்சம் கூட கவலை கொள்ள வேண்டாம் எனக் கூறினார். மேலும், திமுக கொள்கைகளை எந்த காலத்திலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் எனவும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்த பட்ச சமரத்தைக் கூட திமுக செய்யாது. திமுக தனது கொள்கையில் உறுதியாக இருக்கும் எனப் பேசினார்.








