முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் பிறந்த நாள் இன்று (ஆகஸ்ட்-17).
முரசொலி மாறன் என்றதும் எல்லாருக்கும் நினைவு வருவது திமுகவின் டெல்லி முகமாக இருந்தார் என்பதும் கருணாநிதி அவரை தனது மனசாட்சி என்று கூறியதும் தான் நினைவுக்கு வரும். அதேபோல், திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர் என்பதால், வாரிசு அரசியல் குறித்த குற்றச்சாட்டு இவரை முன்னிறுத்திக் கிளப்பப்பட்டதுண்டு. ஆனால், அண்ணா இருந்த போதே அரசியலுக்கு வந்தவர் முரசொலி மாறன். 1967-ல் தென் சென்னை தொகுதியில் வென்றிருந்த அண்ணா, தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றதால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட முரசொலி மாறன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இதனையெல்லாம் தாண்டி இந்தியாவின் நவீன பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்த சிற்பிகளில் முரசொலி மாறனும் ஒருவர்.
வாஜ்பாய் அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக முரசொலி மாறன் இருந்த காலகட்டங்கள் மிகவும் சிக்கலானது. உலகமயமாக்கலின் காரணமாக மிகக் கடினமான சூழல்களை இந்தியா சந்தித்துக் கொண்டிருந்தது. கத்தாரின் தோஹாவில் நடந்த உலக வர்த்தக கூட்டமைப்பின் மாநாட்டில் முரசொலி மாறனின் உரை மிகவும் முக்கியமானது. வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் வளர்ந்த நாடுகளால் எடுக்கப்பட்ட முயற்சிகளை மாறன் கண்டித்துப் பேசினார். முரசொலி மாறன் என்ற ஒற்றை மனிதரின் முயற்சியால் வளரும் நாடுகளின் குரல் வர்த்தக அமைப்பில் செவிமடுக்கப்பட்டதாக பிஸினெஸ் வீக், வால் ஸ்ட்ரீட் ஜேர்னல், உள்ளிட்ட பத்திரிக்கைகள் பாராட்டின.
அண்மைச் செய்தி: ‘ஜாதி – மதம் இல்லை எனச் சான்றிதழ்; இரண்டு வாரங்களில் வழங்க உத்தரவு!’
அதேபோல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கொண்டு வந்தது முரசொலி மாறனின் மற்றுமொரு சாதனை. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக மாறன் இருந்த போது 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதற்கான கொள்கை மத்திய அரசால் வகுக்கப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் முக்கிய நோக்கம். ஏற்கனவே சீனாவில் வெற்றிகரமாக அமைக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் குறித்து அறிந்து கொள்ள முரசொலி மாறன் சீன சென்று வந்தார்.
அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த திராவிட இயக்க ஆய்வாளராகவும் அறியப்பட்டவர் முரசொலி மாறன். மாறனின் மாநில சுயாட்சி குறித்த நூல் இன்றளவும் திராவிட இயக்கத்தின் சிறந்த ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவராக முரசொலி மாறன் இருப்பார் என்றால் அது மிகையல்ல.









