தனுஷ்கோடி கடல் பகுதியில் கிடைத்த துப்பாக்கி தோட்டாக்களைக் கைப்பற்றி கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடற்கரை அருகே பகுதியில் வெள்ளை நிறத்தில் டப்பா ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்த மீனவர்கள் அந்த டப்பாவில் மர்மப்பொருள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற கியூ பிரிவு போலீசார் அதனை பரிசோதித்ததில் அதில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.
இந்த தோட்டாக்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்த போது 5.6 எம்.எம்.கொண்ட 4 தோட்டாக்களும், 9 எம்.எம். கொண்ட 2 தோட்டாக்களும், ஒரு டம்மி தோட்டாவும் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அப்பகுதி மீனவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மர்மமான முறையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







