2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, 2 ஏக்கர் நிலம் யாருக்கேனும் வழங்கினார்களா?என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அதிமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். அதிமுக நாட்டு மக்களுக்கான கட்சி என்றும், திமுக ஒரு குடும்பத்திற்கான கட்சி என்றும் விமர்சித்தார். மேலும் 2011- ம் ஆண்டு தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது போல் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது, என்று குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, 2 ஏக்கர் நிலம் யாருக்கேனும் வழங்கியுள்ளார்களா என்று கேள்வி எழுப்பினார்.
முந்தைய திமுக ஆட்சியில் சொல்லிக் கொள்ளும்படி எதையும் செய்யவில்லை என்பதால், ஸ்டாலினால் அப்படி எதையும் குறிப்பிட்டுப் பேச முடியவில்லை. அதிமுக ஆட்சியில் 52 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதாகவும், 12 லட்சத்து 31 ஆயிரம் பேருக்குத் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கடந்த தேர்தல்களில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக அவர் கூறினார்.







